சிவகாசி தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர்

சிவகாசி தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர்
X

 சிவகாசியில் உள்ள அய்யநாடார் - ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 60வது ஆண்டு வைர விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி.

நாட்டின் வளர்ச்சி குறைவாக இருந்த காலகட்டத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு அய்யநாடார் இந்த கல்லூரியை துவக்கினார்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள அய்யநாடார் - ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 60வது ஆண்டு வைர விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரியின் கலையரங்கில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது: சிவகாசியின் தீப்பெட்டி, பட்டாசு மற்றும் அச்சுத் தொழில்கள் உலக அரங்கில் சிறப்பான பெயரை பெற்றுள்ளது நமக்கெல்லாம் பெருமையானது.

நாட்டின் வளர்ச்சி குறைவாக இருந்த காலகட்டத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு அய்யநாடார் இந்த கல்லூரியை துவக்கினார். அன்று அவர் போட்ட விதை இன்று பெரிய மரமாக வளர்ந்து, பல ஆயிரக்கணக்கான மாணவர்களை கல்வியாளர்களாக, தொழில் முனைவோர்களாக, பல துறைகளின் சாதனையாளர்களாக இருந்து வருகின்றனர். இந்த கல்லூரி மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள் பல வெளிநாடுகளிலும், சர்வதேச பத்திரிகைகளிலும் இடம்பெற்று பெரும் புகழை பெற்றிருப்பது மகிழ்ச்சியான நிகழ்வு.

கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தற்போதைய மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில், இந்தியா சுதந்திரமடைந்த 100 -ஆவது ஆண்டை கொண்டாடும் போது அதன் பங்களிப்பாக சிவகாசி கல்லூரி மாணவர்களின் சேவையும் அதில் இருக்கும். இந்த கல்லூரி சிறந்த மனிதர்களையும், சிறந்த தலைவர்களையும், சிறந்த தொழில் முனைவோர்களையும் உருவாக்கி உள்ளது. மேலும் உருவாக்கி வருகிறது என்றார் ஆளுநர்.

பின்னர் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் அபிரூபன், செயலாளர் அய்யன் கோடீஸ்வரன், ஆட்சிமன்றக்குழு தலைவர் ராமமூர்த்தி, கல்லூரி முதல்வர் அசோக், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story