சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடங்கள்: அச்சத்துடன் வரும் மாணவர்கள்
போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாத நிலையில், மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியுடன் இணைந்துள்ள திருத்தங்கல் பகுதியில், 126 ஆண்டுகள் பெருமை வாய்ந்த சி.ரா. அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசுப்பள்ளி வளாகத்தில், தொடக்கப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி என தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. சுமார் 2 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர்.
அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் படித்து வரும் இந்தப் பள்ளியில், போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாத நிலையில், மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர். மேலும், பள்ளியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
மேலும், பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்த நிலையில் இருப்பதாலும், பள்ளியில் இரவு காவலர் இல்லாததாலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளியை மது குடிக்கும் இடமாக பயன்படுத்தி வரும் அவலமும் இருந்து வருகிறது. மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள சுகாதார வளாகம் சேதமடைந்து இருப்பதால், மாணவர்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
சுகாதார வளாகத்தின் கழிவுநீர் தொட்டி உடைந்து கிடப்பதால், கழிவுநீரிலிருந்து வரும் துர்நாற்றம் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
பள்ளி வளாகத்தில் உள்ள சேதமடைந்த கட்டிடத்தில் பாம்புகள் நடமாட்டம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தொடக்கப்பள்ளியில் 750 மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் குறைவான வகுப்பறைகள் மட்டுமே இருப்பதால், ஒவ்வொரு வகுப்பறையிலும் அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் அமர வைக்கப்படுகின்றனர். இட நெருக்கடியில் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு சரியான முறையில் பாடம் நடத்த முடியாத நிலையில் ஆசிரியர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
மேலும், பள்ளியில் வாகன நிறுத்துவதற்கு வசதி இல்லாததால் மாணவர்கள் தங்களது சைக்கிள்களை திறந்த வெளியில் நிறுத்துகின்றனர். மழை மற்றும் வெயிலினால் சைக்கிள்கள் மற்றும் ஆசிரியர்களின் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்து வருகின்றன.
இது குறித்து, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் சங்கர் கூறும்போது, மாவட்ட நிர்வாகம் பெருமை மிக்க இந்தப்பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 2 கோடியே, 65 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது.
இந்த கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட வேண்டும். பள்ளி வளாகத்தில் நடைபெறும் சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில், பள்ளிக்கு காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். பள்ளியில் சேதமடைந்துள்ள கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். தமிழகத்தில் புதியதாக தொடங்கப்பட்ட நம்ம ஸ்கூல் திட்டத்தை, திருத்தங்கல் சி.ரா. அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து செய்ய வேண்டும் என கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu