அரசியல் காழ்புணர்ச்சியால் செந்தில்பாலாஜி கைது: காங்கிரஸ் எம்.பி. விமர்சனம்

அரசியல் காழ்புணர்ச்சியால் செந்தில்பாலாஜி கைது: காங்கிரஸ் எம்.பி. விமர்சனம்
X

 சிலகாசியில் ரத்த தானம் செய்த தன்னார்வலர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை எம்.பி. மாணிக்கம்தாகூர் வழங்கினார். 

பாஜக அண்ணாமலையின் தேர்தல் தோல்விக்கு பழிவாங்கவே அமைச்சர் செந்தில்பாலாஜி கைது என்றார் எம்.பி. மாணிக்கம்தாகூர்

அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தோல்வியடைய காரணமாக இருந்தார் என்பதற்காகவே, அமலாக்கத்துறையை ஏவிவிட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில், புதியதாக திறக்கப்பட்டுள்ள குருதி பகுப்பாய்வு மையத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் பார்வையிட்டார். இதனையடுத்து நடந்த நிகழ்ச்சியில் ரத்த தானம் செய்த தன்னார்வலர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை எம்.பி. மாணிக்கம்தாகூர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒன்றிய பாரதிய ஜனதா அரசு ஏவல் துறைகளை கைகளில் வைத்துக் கொண்டு எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களையும், மாநில அமைச்சர்களையும், மாநில மக்களையும் பாடாதபாடு படுத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை என்ற அதிகாரமிக்க அமைப்பைக் கொண்டு எதிர்கட்சிகளை மிரட்டி வருகின்றனர்.

பிரதமர் மோடியை கேள்வி கேட்டார் என்ற காரணத்திற்காக எங்கள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித்தனர். தற்போது நாடு முழுவதும் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனை பாஜக கட்சியினரால் தாங்கி கொள்ள முடியவில்லை. எனவே திமுகவை முடக்கும் வேலைகளை பாஜக செய்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தும் படுதோல்வி அடைந்தார். அவரது தோல்விக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தான் காரணம் என்று கூறி வந்த அண்ணாமலை, தனது தலைமையிடம் சொல்லி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட விளைவு தான் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது என்ற சம்பவம்.

திமுக கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இதைவிட மேலான மிரட்டல்களையும், அடக்கு முறைகளையும் தாண்டித்தான் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு தெரியவில்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அடக்குவது, மிரட்டுவது, கலவரத்தை தூண்டுவது, சூழ்ச்சி செய்து மக்களை பிரிப்பது என்பது தான். எத்தனை மிரட்டல்கள், அடக்குமுறைகள் வந்தாலும் திமுக கட்சி அதனை எதிர்கொண்டு வெற்றி பெறும். வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சிக்கு நாட்டு மக்கள் சரியான பதிலடி கொடுக்க காத்திருக்கின்றனர்.

சாமானிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. இந்தப் பிரச்னைகளை தீர்ப்பதற்கு ஒன்றிய மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கும் எதிர்கட்சிகளின் குரல்களை நசுக்கும் வேலையில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்று கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!