சிவகாசி மாநகராட்சிக் கூட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்ற எதிர்ப்பு

சிவகாசி மாநகராட்சிக் கூட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்ற எதிர்ப்பு
X

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி கூட்டம், மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நடைபெற்றது

திருத்தங்கலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் அராஜகம் நடக்கிறது ஆக்கிரமிப்பில் இல்லாத இடங்களையும் இடிக்கின்றனர்

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி கூட்டம், மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநகராட்சியில் உடனடியாக செய்யப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள், பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் திருத்தங்கல் பகுதி முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக, மாமன்ற உறுப்பினர்கள் கடுமையாக பேசினர். மேலும் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் இந்திராதேவி பேசும்போது, சிவகாசி மாநகராட்சி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, திருத்தங்கல் பகுதியில் 2 மண்டலங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் திருத்தங்கல் நகராட்சியாக இருந்தபோது நடைபெற்ற பணிகள் கூட தற்போது நடைபெறவில்லை.

திருத்தங்கல் பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக 2 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாமன்றத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பேசினார். மேலும் மாமன்ற உறுப்பினர்கள் செல்வம், சசிக்குமார் பேசும்போது, திருத்தங்கல் பகுதியி்ல் ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் அராஜகம் நடக்கிறது. ஆக்கிரமிப்பில் இல்லாத இடங்களையும் கண்மூடித்தனமாக அதிகாரிகள் இடிக்கின்றனர்.

திருத்தங்கல் பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடன் வாழ்ந்து கொண்டுள்ளனர். எனவே ஆக்கிரமிப்புகள் அகற்றத்தை முறைப்படுத்தி செய்திட வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து, முன்னதாக தகவல் தெரிவிக்க வேண்டும். திருத்தங்கல் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை பாராபட்சம் இல்லாமல் அதிகாரிகள் செய்திட வேண்டும் என்று பேசினர். மாமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களது வார்டு பகுதிகளை அதிகாரிகள் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டி பேசினர். இதனால் மாமன்ற கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மேயர் சங்கீதா இன்பம் பேசும்போது, சிவகாசி மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளும், அனைத்து பகுதிகளும் ஒன்று தான். எந்தவிதமான பாராபட்சமும் இல்லாமல் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெறும் என்று பேசினார்.

Tags

Next Story