பாஜக வை வீழ்த்தவே எதிர்கட்சிகள் கூட்டணி: கே.எஸ். அழகிரி

பாஜக வை வீழ்த்தவே  எதிர்கட்சிகள் கூட்டணி: கே.எஸ். அழகிரி
X

காமராஜர் இல்லத்தில் உள்ள காமராஜரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி.

பாரதிய ஜனதா கட்சியின் மக்கள் விரோத போக்கிற்கு எதிராகவே, எதிர் கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன

பாரதிய ஜனதா கட்சியின் மக்கள் விரோத போக்கிற்கு எதிராகவே, எதிர் கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

விருதுநகரில், முன்னாள் முதல்வர் கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், காமராஜர் இல்லத்தில் உள்ள காமராஜரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உடன் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர். பின்னர் விருதுநகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிம் மேலும் அவர் கூறியதாவது: தமிழகத்தின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தவர் கர்மவீரர் காமராஜர். ஆனால் அவரை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் ஜனசங்கம் என்ற பாரதிய ஜனதா கட்சி. கர்நாடகா மாநிலத்தில் மேக்கேதாட்டுவில் அணை கட்டக் கூடாது என்று தமிழகஅரசு கூறி வருகிறது. இதனை தமிழக காங்கிரஸ் கட்சியும் வரவேற்கிறது.

தமிழக மக்களின் நலனுக்காக திமுக அரசு கொண்டு வரும் திட்டங்களையெல்லாம் காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தமிழகத்தின் மீது உண்மையான அக்கறை இருந்தால், மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று அறிக்கை விடட்டும் பார்க்கலாம். அப்படி அறிக்கை அவரிடமிருந்து வராது. ஏனென்றால் மேக்கே தாட்டுவில் அணை கட்டுவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது அப்போதைய பாஜக அரசு. பாஜக கட்சியினர் இரட்டை வேடம் போடுகின்றனர்.

9 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மாடல் அரசு என்று கூறி பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தது தான் பாஜக கட்சி. வெளி நாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் ரூபாய் தருவோம் என்று கூறிய பாஜக கட்சியினர், இப்போது 9 ஆண்டுகள் ஆட்சி செய்து முடித்த பின்பு நாங்கள் அப்படி கூறவில்லை, கருப்பு பணத்தை மீட்டால் இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற கணக்கில் கூறினோம் என்று கூறி வருகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை உள்ளி்ட்ட பாஜகாவினர் இப்போது இப்படி பேசி வருகின்றனர். மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்று பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மற்றும் பாஜக கட்சியினர் நினைத்து வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் பொய்யான முகத்திரையை கிழிப்பதற்காகவும், பாரதிய ஜனதா கட்சியின் மக்கள் விரோத போக்கிற்கு எதிராவும் தான், தேசிய அளவில் எதிர் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற உள்ளது.

இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோல்வியடையச் செய்வது ஒன்று எங்களின் ஒரே இலக்கு. அதனை நோக்கித்தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியும் நாட்டு மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தலைவர் ராகுல்காந்தியை எப்படியாவது முடக்கி வைக்க வேண்டும் என்று பாஜக முயற்சி செய்கிறது. அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கே.எஸ்.அழகிரி பேசினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!