நான் முதல்வன் திட்டம்: கல்லூரிகளுக்கு களப் பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவர்கள்

விருதுநகர் மாவட்டத்திலுள்ள 5 ஒன்றியங்களைச் சேர்ந்த 700 மாணவர்கள் மதுரை பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டது
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர் கல்வி ஆர்வத்தை தூண்டும் பயணம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் வழிகாட்டும் நோக்கில், விருதுநகர் மாவட்டத்திலுள்ள 5 ஒன்றியங்களைச் சேர்ந்த 700 மாணவர்கள் மதுரை பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டது
விருதுநகர் மாவட்டம், பள்ளிக்கல்வித்துறை சார்பாக, நேற்று 5 ஒன்றியங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் 12 -ஆம் வகுப்பு பயிலும் 700 மாணவர்களை, நான் முதல்வன் திட்டத்தின் மூலம், மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் வழிகாட்டும் நோக்கில், மதுரையில் உள்ள பொறியியல், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு, அழைத்துச் செல்லப்பட்டு, உயர்கல்வியில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நாட்டின் செழுமைக்காக அவர்களின் சிறந்த திறமையைக் கண்டறிய வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக மாணவர்களின் திறன், கல்வித்திறன் மற்றும் மறைந்திருக்கும் திறமை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும்.
இத்திட்டம், ஆங்கிலம் பேசும் வகுப்புகள், குறியீட்டு முறை, ரோபாட்டிக்ஸ், வெளிநாட்டு மொழி வகுப்புகள், பாரம்பரிய தமிழ்நாடு கலாச்சார வகுப்புகள் மற்றும் பிற அத்தியாவசிய தலைப்புகளை வழங்குவது, தொழில்முறை ஆலோசனைகளை வழங்குவது, பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வெற்றிகரமான வாழ்க்கை மற்றும் வாழ்க்கைக்கான திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டங்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், ஒரு மாணவர் தனது திறமையை அடையாளம் காண முடியும். மேலும், இந்த மறைக்கப்பட்ட திறமை அவருக்கு நிலையான வாழ்க்கையை வாழ உதவும். இந்தத் திட்டம் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் எனவும், கல்வியின் தரத்தை மேம்படுத்தி இளைஞர்களின் திறனை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு சிறந்த கல்லூரியை தேர்வு செய்து கல்வி பயின்று வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டுமென்ற நோக்கில், வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, அரசு மற்றும் அரசு உதவு பெறும் பள்ளிகளில் 12 -ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி பயில ஆர்வமூட்டும் வகையில், அருகாமையில் உள்ள கல்லூரிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் 1500 மாணவர்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சிவகாசி, வெம்பக்கோட்டை, இராஜபாளையம், வத்திராயிருப்பு, திருவில்லிபுத்தூர் ஆகிய 5 ஒன்றியங்களைச் சேர்ந்த 700 மாணவர்கள் மதுரையில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரிகளுக்கு இலவச பேருந்து மற்றும் உணவு வசதிகள் ஏற்பாடு செய்து அழைத்துச் செல்லப்பட்டதாக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்தார்.
இம்மாணவர்களுக்கு கல்லூரியில் உள்ள உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகள், அதன் மூலம் கிடைக்கப்பெறும் வேலைவாய்ப்புக்கள், உயர்கல்வியில் உள்ள துறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்டவைகள் குறித்து நேரடியாக சென்று அவர்கள் அறிந்து, தெரிந்து கொள்ளும் வகையிலும், உயர்கல்வி பயில்வதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கும் வகையிலும், கல்லூரி நிர்வாகத்தால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற மாணவர்கள், இந்த உயர்கல்வி ஆர்வத்தை தூண்டும் பயணம் மூலம் உயர்கல்வி பயில்வதற்கான புரிதலும், வழிகாட்டுதலும், ஊக்கமும் கிடைத்துள்ளது எனவும், இந்த வாய்ப்பினை அளித்த தமிழ்நாடு அரசுக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மாணவர்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu