சிவகாசியில் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம்

சிவகாசியில் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம்
X

மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலை.

சிவகாசி பகுதியில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி ஆலைகளில் வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கியது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, வெம்பக்கோட்டை தாலுகா பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற பட்டாசு உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. டி.ஆர்.ஓ. உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலைகளில் சரவெடி, பிஜிலி, அணுகுண்டு, புல்லட் உள்ளிட்ட பட்டாசு ரகங்கள் மட்டுமே தயாரிக்கப்படும்.

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் சரவெடி தயாரிப்பதற்கு தடை விதித்துள்ளது, மேலும் பட்டாசுகள் தயாரிக்கும் மூலப் பொருட்களில் பேரியம் நைட்ரேட் உபயோகிக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரியம் நைட்ரேட் உபயோகிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் இதனை தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டுள்ளது.

இதனால் டி.ஆர்.ஓ. உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் மாவட்ட கண்காணிப்பு குழுவினர் சோதனைகள் நடத்தி, விதி மீறலில் ஈடுபட்ட பட்டாசு ஆலைகளை பூட்டி சீல் வைத்தனர். சில ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து, பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்கவேண்டும், சரவெடிகள் தயாரிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ) உரிமம் பெற்ற, சுமார் 300க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி ஆலைகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.

அடுத்தகட்ட போராட்டமாக வரும் (24ம் தேதி) வியாழன் கிழமையன்று பட்டாசு ஆலைகளின் சாவிகளை, மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது என்று தமிழன் பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!