சிவகாசியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பிரச்சாரம்
சிவகாசி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு.
சிவகாசியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:-
இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒரே குறிக்கோளுடன் இருக்கிறது. மோடியின் 10 ஆண்டு கால அவல நிலையை அகற்ற, இந்தியாவை காப்பாற்ற ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும். மோடி வீழ்த்தப்பட முடியாதவர் அல்ல, வீழ்த்தப்பட வேண்டியவர் என்பதை நாட்டு மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். 10 லட்சம் மக்களின் வாழ்வாதாரமான பட்டாசு தொழிலை ஒரே உத்தரவில் நசுக்கியவர் மோடி. யார் பட்டாசு தொழிலை ந சுக்கினார்களோ அவர்கள்தான் இன்று முகமூடியுடன் உங்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர்.
மோடி மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால், வாக்களிக்கக்கூடிய கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம். மோடி ஆட்சியை அகற்றாவிட்டால், வட மாநிலங்களை ஆக்கிரமித்துள்ள பாசிச சக்தி தமிழகத்தையும் ஆக்கிரமிக்கும். தமிழகத்தில் இரண்டு முறை ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு சல்லி காசு கூட வழங்கவில்லை.
தமிழகம் ஒரு ரூபாய் வரியாக செலுத்தினால், 29 பைசாவை மத்திய அரசு நமக்கு திருப்பி தருகிறது. ஆனால், உத்தரப்பிரதேச அரசு ஒரு ரூபாய் வரி செலுத்தினால், 12 ரூபாயாக மத்திய அரசு திருப்பி வழங்குகிறது. ஒரு கண்ணில் வெண்ணையையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் மத்திய அரசு வைக்கிறது. தமிழக அரசு நிறைவேற்றும் அனைத்து நலத்திட்டங்களும் மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. என்றார்.
கூட்டத்தில் எம்பியும், வேட்பாளருமான மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ. அசோகன், மேயர் சங்கீதா, ஆகியோர்களுடன் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu