தீபாவளி நாளில் கந்த சஷ்டி தொடக்கம்: இறைச்சி விற்பனை குறையுமா?

தீபாவளிச் சந்தைக்கு விற்பனைக்கு வந்த ஆடுகள்
தீபாவளி பண்டிகை நாளில் கந்தசஷ்டி விரதம் தொடங்குவதால் இறைச்சி வியாபாரம் சற்று குறையும் என இறைச்சி வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு உற்சாகமாக தயாராகி வருகிறது.அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், சிறு கடைகள் உள்ளிட்ட பலவகை நிறுவனங்களிலும், தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் பணம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் புதிய ஆடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கியதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக பலத்தமழை பெய்து வருகிறது.
இதனால் தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் தீபாவளி பண்டிகை உற்சாகம் சற்று குறைவாக இருந்து வருகிறது. ஏறக்குறைய பெரும்பாலானவர்கள் தீபாவளிக்கு வாங்க வேண்டிய புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்கி முடித்துள்ளனர். அடுத்து தீபாவளி பண்டிகையின் முக்கியமானதாக இருப்பது ஆட்டு இறைச்சி தான். தீபாவளியன்று 90 சதவிகிதம் மக்கள் ஆட்டு இறைச்சி வாங்கி, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக விருந்துண்டு மகிழ்வார்கள். இதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு ஆட்டு சந்தைகள் நடத்தப்பட்டு, இறைச்சி விற்பனையாளர்கள் தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கிச் சென்றுள்ளனர். சந்தைகளில் ஆடுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இறைச்சிக் கடைகளில், வழக்கத்தைவிட தீபாவளி பண்டிகையன்று இறைச்சி விலை, கிலோவுக்கு 200 ரூபாய் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கடைகளுக்கு தேவையான ஆடுகளை திருமங்கலம், அருப்புக்கோட்டை, விளாம்பட்டி, எட்டையபுரம் ஆட்டு சந்தைகளில் வாங்கி வந்துள்ளனர். இது குறித்து ஆட்டு இறைச்சி விற்பனையாளர்கள் கூறும்போது, சிவகாசி பகுதியில், தனி ஆட்டு இறைச்சி கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், எலும்புடன் கூடிய இறைச்சி கிலோ 700 ரூபாய்க்கும், கிராமப் பகுதிகளில் ஆட்டு இறைச்சி கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஆட்டு இறைச்சி தேவை இருப்பதால், அனைத்து ஆட்டு சந்தைகளிலும், ஆடுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து ஆடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. சந்தைகளில் ஆடுகள் விலை உயர்ந்துள்ளதால், தீபாவளியன்று இறைச்சிக் கடைகளில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ஆயிரத்து 200 ரூபாயாக விற்பனை செய்தால் தான் ஓரளவு கட்டுபடியாகும். மேலும் தீபாவளி பண்டிகை எந்த கிழமையில் வந்தாலும் இறைச்சி விற்பனை நன்றாகவே இருக்கும்.
ஆனால் நிகழாண்டில், தீபாவளி பண்டிகையன்று, பெரும்பாலான மக்கள் கடைப்பிடித்து வரும் கந்தசஷ்டி விரதம் ஆரம்பமாகிறது. இதனால் இறைச்சி விற்பனையில் 10 சதவிகிதம் முதல், 20 சதவிகிதம் குறையும் வாய்ப்புள்ளது. வழக்கமாக தீபாவளிக்கு மறு நாளிலிருந்து கந்தசஷ்டி விரதம் ஆரம்பமாகும். நிகழாண்டு தீபாவளி அன்றே கந்தசஷ்டி விரதம் ஆரம்பமாவதால், சஷ்டி விரதம் இருப்பவர்கள் மற்றும் முருக பக்தர்கள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்துவிடுவார்கள். இதனால் தீபாவளி ஆட்டு இறைச்சி விற்பனை கொஞ்சம் குறையும் வாய்ப்புள்ளது என்று, இறைச்சி விற்பனையாளர்கள் கவலை தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu