சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் உயிரிழப்பு
சிவகாசி அருகே நேரிட்ட வெடி விபத்தில் தரை மட்டமான பட்டாசு ஆலை
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஊராம்பட்டி பகுதியில், சிவகாசியைச் சேர்ந்த கடற்கரை என்பவருக்கு சொந்தமான, இளவரசி பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
சென்னையில் உரிமம் பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் பல்வேறு ரகங்களில் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பூச்சட்டி ரக பட்டாசிற்கு மருந்து செலுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த அறையில் மூலப் பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பட்டாசு தயாரிக்கும் அறை முற்றிலுமாக இடிந்து விழுந்தது. அந்த அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 4 தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள், விபத்தில் காயமடைந்த சுந்தர்ராஜன் (27), குமரேசன் (30), அய்யம்மாள் (70), இருளாயி (45) ஆகிய 4 பேரையும் படுகாயங்களுடன் மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த குமரேசன் மற்றும் சுந்தர்ராஜன் ஆகிய இரண்டு பேரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அய்யம்மாளும் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதனால் பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆனது. விபத்து குறித்து மாரனேரி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu