மாநகராட்சி ஆகியும் நகராட்சி பெயர் பலகை மாறவில்லை: சமுக ஆர்வலர்கள் புகார்

மாநகராட்சி ஆகியும் நகராட்சி பெயர் பலகை மாறவில்லை: சமுக ஆர்வலர்கள் புகார்
X

மாநகராட்சி பெயர் மாற்றம் செய்யப்படாமல் இயங்கும் வாகனம்

வழிகாட்டி பலகைகள், வாகனங்களில் நகராட்சி என்ற பெயரை மாற்ற சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. முதல்கட்டமாக சிவகாசி நகராட்சி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

தரம் உயர்த்தப்பட்ட சிவகாசி மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற்று, திமுக கட்சியை சேர்ந்த சங்கீதா இன்பம் மாநகராட்சி மேயராகவும், திமுக கட்சியைச் சேர்ந்த விக்னேஷ்பிரியா துணை மேயராகவும் பதவியில் உள்ளனர். சிவகாசி மாநகராட்சியாக உருவான பின்பும், நகரின் பல பகுதிகளில் உள்ள பெயர் பலகைகள், வழிகாட்டி பலகைகளில் சிவகாசி நகராட்சி, திருத்தங்கல் நகராட்சி என்றே இருந்து வருகிறது. மேலும் மாநகராட்சி தூய்மை பணி வாகனங்கள் பலவற்றிலும் சிவகாசி நகராட்சி என்றே உள்ளது.

சிவகாசி - விருதுநகர் சாலையில், சிவகாசி நகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பெயர் பலகையே வரவேற்கிறது. சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் இரண்டும் தரம் உயர்த்தப்பட்டு 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் இன்னும் பெயர் பலகைகளில் மாநகராட்சி என்று மாற்றம் செய்யப்படாத நிலையே உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது சிவகாசி, தமிழகத்தின் மிகப்பெரும் தொழில் நகராக இருந்து வருகிறது. சிவகாசியில் நடைபெற்று வரும் தொழில்கள் மூலமாக மத்திய, மாநில அரசுகளுக்கு பல கோடி ரூபாய் வரி செலுத்தப்பட்டு வருகிறது.

சிவகாசிக்கு வியாபார விசயமாக வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் உரிய இடங்களுக்கு செல்வதற்கு அந்தந்தப் பகுதியில் இருக்கும் வழிகாட்டி பலகைகளை பார்த்துச் செல்வார்கள். அந்த வழிகாட்டி பலகைகளை சரியான முறையில் வைக்க வேண்டும். வழிகாட்டு பலகைகளில் சிவகாசி மாநகராட்சி என்று பெயரிட வேண்டும். இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!