நான்கு வழிச்சாலையில் டிரோன்கள் பறக்கத் தடை: விருதுநகர் எஸ்.பி. அறிவிப்பு
விருதுநகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. சீனிவாசப் பெருமாள்.
விருதுநகர் : விருதுநகர் நான்கு வழிச்சாலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் தென் தமிழகத்தில் பயணம் செல்வதால், 2 நாட்கள் இந்த தடை அமலில் இருக்கும் என்று தெரிகிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது சுற்றுப்பயணம் செய்து அங்கு நடக்கும் அரசு திட்டப்பணிகளை மேற்பார்வையிடுகிறார். அவ்வப்போது முதல்வர் அறிவுறுத்துவதால் நடைபெறும் பணிகளும் சுணக்கம் இல்லாமல் வேகமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாகர்கோவிலில் நடக்கும் விழா ஒன்றில் பங்குபெற வரும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரையிலிருந்து கிளம்பி விருதுநகர் நான்கு வழிச் சாலை வழியாக திருநெல்வேலியை அடைந்து அங்கிருந்து நாகர்கோவிலை அடைகிறார். பின் அதே வழியில் மீண்டும் பயணித்து மதுரையை அடைகிறார்.
மொத்தம் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணத்தில் காரிலேயே சாலை மார்க்கமாக பயணிப்பதால் அவருக்கு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக அந்தந்த மாவட்ட காவல் நிர்வாகங்கள் விழிப்பு நிலையில் இரண்டு நாட்கள் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக விருதுநகர் நான்கு வழிச் சாலை பகுதிகளிலும் இந்த பாதுகாப்பு இன்று அதிகாலை முதல் கொண்டுவரப்பட்டுள்ளது.
விருதுநகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மார்ச் 6ம் தேதி (திங்கள் கிழமை) மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கும், நாளை 7ம் தேதி (செவ்வாய் கிழமை) திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கும் விருதுநகர் வழியாக, நான்கு வழச்சாலையில் பயணம் செல்ல இருக்கிறார். எனவே மதுரை - திருநெல்வேலி நான்கு வழிச்சாலை மற்றும் முதல்வர் செல்லும் பகுதிகள், தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முதல்வர் பயணம் செல்ல இருக்கும் இந்த இரண்டு நாட்களும், நான்கு வழிச்சாலையில் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu