சிவகாசி அருகே குலதெய்வ வழிபாட்டுக்கு திரண்ட பக்தர்கள்

சிவகாசி அருகே குலதெய்வ வழிபாட்டுக்கு திரண்ட பக்தர்கள்
X

சிவகாசி அருகே, குலதெய்வ வழிபாட்டிற்காக திரண்ட பக்தர்கள்

பூஜைகளில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குலதெய்வக் கோவில்களில் நேற்று, மாசி மாதாந்திர வெள்ளியை முன்னிட்டு இரவில் இருந்து இன்று அதிகாலை வரை விடியவிடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சிவகாசி ஜக்கம்மா கோவிலில் மாசி பெருந்திருவிழா நேற்று இரவு முழுவதும் சிறப்பாக நடைபெற்றது. மேலும், மாலையம்மன் கோவில், தோப்பு கருப்பசாமி கோவில், வீரமாடன் சுவாமி கோவில், சுடலைமாடன் சுவாமி கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் பாரி வேட்டை, மயானக் கொள்ளை உட்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பூஜைகளில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் குவிந்தனர். நேற்று இரவு முழுவதும் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடியவிடிய மேளச் சத்தம், குலவைச் சப்தம் கேட்டபடியே இருந்தது. இன்றும், நாளையும் குல தெய்வக் கோவில்களில் சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.

குலதெய்வ வழிபாடு...

தெய்வ வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு என்பது அவரவர்களுடைய முன்னோர்கள் பல தலைமுறைகளாய் வழிபட்டு வந்த தெய்வமாகும். குல தெய்வ வழிபாடு ஏழு தலைமுறைகளைக் காக்கும். குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம் கூடவே இருந்து வழிநடத்தும் சக்தி கொண்டது.

ஒரு குடும்பத்தில் குழந்தைக்கு முதல் மொட்டை அடித்து, முடி காணிக்கை செலுத்துவது, குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது இன்றுவரை வழக்கமாக வந்துள்ளது. சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் குலதெய்வம் கோயிலுக்கு உடனே செல்ல முடியாவிட்டால், குலதெய்வத்தை நினைத்து அவர்கள் குடும்ப வழக்கப்படி பணத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி வருவது நடைமுறையில் உள்ளது.வீட்டில் எந்த விதமான சுபகாரிய பத்திரிக்கையில் குலதெய்வத்தின் பேரைக் குறிப்பிடுவது சம்பிரதாயம்.

அண்ணன், தம்பி குடும்பத்தினர் எல்லாரும் ஒற்றுமையாக நின்று வழிபாடு செய்யும்போது குலதெய்வங்கள் மட்டுமின்றி குலதெய்வங்களை வழிபட்ட முன்னோர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்து, அவர்களின் பரிபூரண ஆசி எளிதாக வந்து சேரும்.குலதெய்வத்தை வழிபடாமல் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. என்ன தான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் முழுமையான பலன் கிடைப்பது என்பது அரிது என்றும் நம்பப்படுகிறது.

வீடுகளில் உள்ள பூஜை அறையில் உங்கள் குலதெய்வத்தின் படம் இடம் பெற வேண்டும். உங்களின் வேண்டுதல்களை உங்களின் குலதெய்வத்திடம் சொல்லி வேண்டினால் அனைத்து வேண்டுதல்களையும் அந்த குலதெய்வம் உங்களுக்கு தீர்த்துவைக்கும். உங்கள் வீட்டிலேயே மாதந்தோறும் பெளர்ணமி அன்று குலதெய்வ படத்தை வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குலதெய்வத்தின் அருளாசி குடும்பத்துக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!