சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
X

பைல் படம்

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் பலியானார்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவர் பலியானதையடுத்து பலி எண்ணிக்கை 4 - ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள கனஞ்சாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில், கடந்த 19ம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே முனீஸ்வரி மற்றும் சங்கர் (50) என்ற இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு சிவகாசி, சாத்தூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, தாயில்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (55) என்பவர் உயிரிழந்தார். மேலும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாத்தூர் அருகேயுள்ள அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (25) என்பவரும் உயிரிழந்தார். இதனால் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்த வாலிபர் கருப்பசாமி, பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சங்கரின் மகன் ஆவார். பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அமீர்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story