விருதுநகரில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டப்பயிற்சி: ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்ட பயிற்சி முகாமை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக வட்டார அளவிலான பயிற்றுநர்களுக்கான சமையல் பயிற்சி மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் மற்றும் சிற்றுண்டி சமைக்கும் பொறுப்பாளர்கள் அனைவருக்குமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி பேசும்போது, தமிழகம் முழுவதும் 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டம் வரும் 15ம் தேதி துவங்க உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 69 அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 3 ஆயிரத்து 884 மாணவர்கள், இந்த திட்டத்தினால் பயன் பெறவார்கள். இதனை சிறப்பாக செயல்படுத்துவதற்காக தொடக்கப்பள்ளியில் உள்ள சத்துணவு கூடங்கள் அனைத்தும் பழுதுகள் நீக்கி சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை சிறப்பாக செய்வதற்காக சமையல் கலை கல்லூரியின் மூலம், பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மதிய உணவு திட்டம் மூலம் கல்வி வளர்ச்சியில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் தான் இந்த திட்டம் முதன்முதலாக தொடங்கப்பட்டது. அதே போல ஆரம்பபள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு வழங்கும் திட்டமும், ஆரம்ப கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். முதல்கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று பேசினார். பின்னர் பயிற்றுனர்கள் தயாரித்த ரவை கிச்சடி, ரவை கேசரி, கோதுமை ரவை உப்புமா, சேமியா உப்புமா, வெண்பொங்கல், சாம்பார் உள்ளிட்ட உணவுகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் சாப்பிட்டு ஆய்வு செய்தனர். காலை உணவு மிகவும் தரமாக இருப்பதாகவும், பள்ளி மாணவர்களுக்கு இதே போல சுவையான, தரமான உணவை வழங்க வேண்டும் என்று ஆட்சியர் மேகநாதரெட்டி கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, மகளிர் திட்ட இயக்குநர் தெய்வேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ராஜம், உதவி இயக்குநர் ஊராட்சிகள் உமாசங்கர், செயற்பொறியாளர் சக்திமுருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (மதிய உணவு) சங்கரநாரயணன்(பொ) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu