காரியாபட்டியில் ரத்ததான முகாம்
காரியாபட்டியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரத்ததான முகாம் நடத்தப்பட்டது
HIGHLIGHTS

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் தவ்ஹீத் ஜமா அத் சார்பில் நடந்த ரத்ததான முகாம்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் விருதுநகர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி சார்பாக, ரத்ததான முகாம் நடைபெற்றது. தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் ரியாஸ் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைத் தலைவர் அக்பர் அலி, பொருளாளர் ஆசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரியாபட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் பிச்சைப்பாண்டி முகாமினை, தொடங்கி வைத்தார். முகாமில், அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ குழுவினர் 50 நபர்களிடம் ரத்தம் சேகரித்தனர்.
முகாமில், தவ்ஹீத் ஜமா அத் காரியாபட்டி கிளை தலைவர் சபீர், செயலாளர் இஸ்மாயில், பொருளாளர் ஷாஜகான்,துணை செயலாளர் சம்சுதீன், துணைத் தலைவர் இஷாக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இரத்த தானம் செய்பவர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்:
மது அருந்தியவர்கள் இரத்ததானம் செய்ய முடியாது. மது அருந்தியதில் இருந்து 24 மணிநேரம் ஆகியிருத்தல் அவசியம்.புகைப்பிடித்திருப்பின் குறைந்தது ஒருமணி நேரத்திற்குப் பிறகு இரத்த தானம் செய்வது சிறந்தது. இரத்த தானம் செய்த பிறகு ஒரு மணிநேரம் கழிந்த பிறகே புகைப் பிடிப்பது நல்லது. அதற்கு முன்பே புகைப்பிடிப்பது மயக்கம் ஏற்படுதல் போன்றபாதிப்புகளை உருவாக்கும்.
ஆகவே புகையும் மதுவையும் முடிந்த அளவிற்கு தவிர்ப்பது மேலும் உடலுக்கு நன்மை பயக்கும்.இரத்த தானம் செய்பவர் நன்கு உணவு உண்ட பிறகே இரத்த தானம் செய்யவேண்டும். போதிய உணவு, உறக்கம் இரண்டும் மிகவும் அவசியம்.இரத்த தானம் செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம்.
இரத்த தானம் தொடர்ச்சியாக செய்ய விரும்புபவர் குறைந்தது 3 மாத இடைவெளிக்குப் பிறகே இரத்த தானம் செய்ய வேண்டும்.இரத்த தானம் செய்தவுடன் கைகளை நன்றாக மடக்கி மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு பளுவுள்ள பொருட்களை தூக்குவது போன்ற கடினமான வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.
இரத்த வங்கியின் செயல்பாடுகள்:
ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சராசரியாக 4½ (நான்கரை) முதல் 5½ (ஐந்தரை) லிட்டர் இரத்தம் உள்ளது.இரத்த தானம் செய்ய வருபவரிடமிருந்து தேவைக்கேற்ப 350மிலி முதல் 450 மிலி வரை மட்டும் சேகரிக்கப்படுகிறது.சேகரிக்கப்பட்ட இரத்தம் இரத்த வங்கிகளில் குளிரூட்டப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.
சேகரிக்கப்பட்ட முழு இரத்தத்திலிருந்து தேவைக்கேற்ப இரத்தப் பகுதிப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றது. இரத்தப் பகுதிப் பொருட்கள் (இரத்தச் சிகப்பணு, இரத்த தட்டுக்கள், பிளாஸ்மா) அனைத்தும் தகுந்த வெப்பநிலையில் குறிப்பிட்ட காலம் வரையிலும் பாதுகாக்கப்படுகிறது.