கொல்லம் ரயில் சிவகாசியில் நின்று செல்ல பாஜக காரணமில்லை : காங்கிரஸ் எம்பி
விருதுநகர் எம்.பி. மாணிக்க தாகூர்.
சென்னை - கொல்லம் விரைவு ரயில், சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு போராட்டம் நடத்திய மக்கள் தான் காரணமே தவிர பாஜக அல்ல என்றார் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர்.
சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் விரைவு ரயில் விருதுநகர் ரயில் நிலையத்திற்கு பின்பு, திருவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் தான் நிறுத்தப்பட்டு வந்தது. தொழில் நகராக இருக்கும் சிவகாசி ரயில் நிலையத்தில் இந்த விரைவு ரயில் நிறுத்தப்படாமல் புறக்கணிப்பு செய்து வந்தது. இதனால் சிவகாசியிலிருந்து சென்னை மற்றும் கொல்லம் செல்லும் ரயில் பயணிகள் கடும் அவதியடைந்து வந்தனர்.
சென்னை - கொல்லம் விரைவு ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். மேலும் இதற்காக நாடாளுமன்றத்திலும் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
ஆனால் தொடர்ந்து சென்னை - கொல்லம் விரைவு ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படவில்லை. இதனை கண்டித்து கடந்த ஆண்டு சிவகாசி ரயில் நிலையத்தில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் எம்பி தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் சிவகாசி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். அதன்பின்பு நடைபெற்ற தென்னக ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ இந்த கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். பல்வேறு போராட்டங்களுக்கு பின்பு, ஜுலை 1ம் தேதி (சனி கிழமை) முதல், சென்னை - கொல்லம் விரைவு ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானவுடன் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, சென்னை - கொல்லம் விரைவு ரயில் சிவகாசியில் நின்று செல்லக் காரணம் பாஜக கட்சி தான் என்று கூறி அறிக்கை வெளியிட்டார். இது குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறும்போது, சென்னை - கொல்லம் விரைவு ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டதற்கு காரணம் இதற்காக போராடிய மக்கள் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தான், பாரதிய ஜனதா கட்சி அல்ல.
இதற்காக போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றி கூறுகிறேன். ஆனால் இப்போது ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு விட்டு அதற்கு பாஜக தான் காரணம் என்று அண்ணாமலை கூறுவதை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu