சிவகாசியில் தொல்பொருள் கண்காட்சி: அமைச்சர்கள் தொடக்கம்
சிவகாசியில், தொல்பொருள் கண்காட்சி, அமைச்சர்கள் பார்வை.
சிவகாசி அருகே, அகழாய்வில் கிடைத்த பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் கண்காட்சி அரங்கத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை - விஜயகரிசல்குளம், மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலாம் கட்ட அகழாய்வில் ஆயிரக்கணக்கான பழமையான மற்றும் தொன்மையான பொருட்கள் கிடைத்தன. இதனையடுத்து தற்போது இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பார்வையிடுவதற்கு பொதுமக்கள் ஆர்வம் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து வெம்பக்கோட்டையில், அகழாய்வில் கிடைத்த பொருட்களை பார்வையிடும் வகையில் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டது. இதனை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பழமையான பொருட்களை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர் தங்கம்தென்னரசு கூறியதாவது: மேட்டுக்காடு பகுதியில் நடத்தப்பட்ட முதலாம் அகழாய்வில் கண்ணாடி மணிகள், கல் மணிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட பகடைக்காய்கள், எடைக் கற்கள், யானை தந்தங்களால் செய்யப்பட்ட பொருட்கள் ஏராளமாக கிடைத்துள்ளன.
நமது தமிழர்களின் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் முறைகள் உள்ளிட்டவை இதன் மூலம் அரிய முடியும். அகழாய்வில் கிடைத்த பொருட்கள் குறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பார்த்து பயன்பெறலாம் என்று கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu