ஆலை உரிமையாளருக்கு மிரட்டல்: அ.தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு
முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன்..
பட்டாசு ஆலை உரிமையாளரை கடத்தி மிரட்டிய புகாரில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள வேண்டுராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர், பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். சாத்தூர் தொகுதி அ.தி.மு.க. கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், தன்னை கடத்திச் சென்று 2 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக திருவில்லிபுத்தூர், நீதித்துறை 2ம் எண் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ரவிச்சந்திரனின் மனுவில், நானும் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், தங்கமுனியசாமி, இ.ரவிச்சந்திரன் ஆகியோர் சேர்ந்து கடந்த 2018ம் ஆண்டு ஒரு பட்டாசு ஆலையை விலைக்கு வாங்கினோம்.
இந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு என்னுடன் கூட்டு சேர்ந்திருந்த ராஜவர்மன் உள்ளிட்ட மூன்று பேரும் தங்களது பங்கு தொகையை பெற்றுக் கொண்டு விலகி விட்டனர்.
பின்னர், பட்டாசு ஆலையில் பங்கு இருப்பது போன்று போலி ஆவணங்கள் தயாரித்த மூன்று பேரும் தங்களுக்கு தலா 2 கோடி ரூபாய் வேண்டும் என்று என்னிடம் கேட்டனர். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன்.
கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜவர்மன் உள்ளிட்டவர்கள் என்னை காரில் கடத்திச் சென்று, திருவில்லிபுத்தூரில் உள்ள ஒரு விடுதியில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டினர். இதற்கு காவல்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்தனர். எனவே, இதில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வள்ளிமணாளன், ரவிச்சந்திரனின் மனுவில் அடிப்படை முகாந்திரம் இருப்பதால், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இருவர் உட்பட 6 பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu