அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பிடிக்க தனிப்படை முனைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்  ராஜேந்திரபாலாஜியை பிடிக்க தனிப்படை முனைப்பு
X

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

ஆர்ப்பாட்டத்திலிருந்து ராஜேந்திரபாலாஜி பாதியில் கிளம்பிச்சென்ற சம்பவம் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமறைவு. சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

பணமோசடி புகார் வழக்கில், முன்னாள் அமைச்சரின் முன்ஜாமீன் மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் விருதுநகர் ஆர்ப்பாட்டத்திலிருந்து பாதியில் வெளியேறிய முன்னாள் அமைச்சரை பிடிக்க, 4 தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி, தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு படு தோல்வியடைந்தார். விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வரும் ராஜேந்திரபாலாஜி மீது, அதிமுக கட்சியைச் சேர்ந்தவர்களே பண மோசடி புகார் எழுப்பி வருகின்றனர்.

சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர், தனது உறவினருக்கு ஆவின் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ப்பதற்காக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் கொடுப்பதற்காக 30 லட்சம் ரூபாயை, அதிமுக கட்சியைச் சேர்ந்த விஜயநல்லதம்பியிடம் கொடுத்ததாகவும், தன்னிடம் பணத்தை பெற்ற விஜயநல்லதம்பி, ராஜேந்திரபாலாஜி, மாரியப்பன் ஆகியோர் தனது உறவினருக்கு வேலை வாங்கித் தராமலும், தன்னிடம் வாங்கிய 30 லட்சம் ரூபாயை திருப்பி தராமலும் மோசடி செய்து ஏமாற்றி விட்டதாக, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ரவீந்திரன் புகார் செய்தார்.

இந்தப்புகாரின் பேரில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த நவம்பர் 18ம் தேதி, ராஜேந்திரபாலாஜி உட்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். மேலும் விஜயநல்லதம்பியும், ராஜேந்திரபாலாஜி அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், முத்துப்பாண்டி ஆகிய 4 பேரும் சேர்ந்து தன்னிடம் 1 கோடியே 60 லட்சம் ரூபாயும், மேலும் கட்சி பொதுக்கூட்டங்கள் செலவிற்காக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சொன்னதன் பேரில் சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு செய்ததாகவும், மொத்தம் 3 கோடி ரூபாயை ராஜேந்திரபாலாஜி உட்பட 4 பேரும் மோசடி செய்து ஏமாற்றிவிட்டனர் என்று, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

விஜயநல்லதம்பி புகாரின் பேரில் கே.டி.ராஜேந்திரபாலாஜி, பலராமன், பாபுராஜ், முத்துப்பாண்டி ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த புகார்களின் பேரில் தான் கைது செய்யப்படுவோம் என்று நினைத்த ராஜேந்திரபாலாஜி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவின் மீது இன்று விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், ராஜேந்திரபாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இன்று காலை விருதுநகரில், அதிமுக கட்சி சார்பில், தமிழக அரசை கண்டித்து ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தபோது, நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த தகவல் ராஜேந்திரபாலாஜிக்கு தெரிய வந்தது. உடனடியாக ஆர்ப்பாட்டத்தை பாதியில் முடித்துவிட்டு தனது காரில் ஏறிய ராஜேந்திரபாலாஜி விரைவாக அங்கிருந்து சென்றுவிட்டார். ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த அதிமுக கட்சியினருக்கு, ராஜேந்திரபாலாஜி அங்கிருந்து பாதியில் கிளம்பிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பண மோசடி வழக்கில் தன்னை போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்று நினைத்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமறைவானதாக கூறப்படுகிறது.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவின் பேரில், ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரபாலாஜியை கைது செய்வதற்காக சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம், கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களிலும், ராஜேந்திரபாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்