சாத்தூர் அருகே சாலை விபத்து: சிறுவன் உயிரிழப்பு

சாத்தூர் அருகே சாலை விபத்து: சிறுவன் உயிரிழப்பு
X

பைல் படம்.

சாத்தூர் அருகே குடிநீர் டிராக்டர் மோதி 2 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மேட்டமலை பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமாரவேல் (32). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இந்திரா (27). இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் பெண் குழந்தையும், 2 வயதில் சோலைராஜ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்திரா தனது குழந்தைகளுடன் மேட்டமலையில் வசித்து வருகிறார். இன்று காலை சிறுவன் சோலைராஜ், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அந்தப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் டிராக்டர் வாகனம், பின்னோக்கி வந்தபோது சிறுவன் சோலைராஜ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுவன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். விபத்து தகவலறிந்த சாத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, சிறுவன் சோலைராஜ் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய குடிநீர் டிராக்டர் வாகன உரிமையாளர் கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, குடிநீர் வண்டியை ஓட்டிவந்த வீரபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி (17) என்ற சிறுவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தூர் பகுதிகளில் பல்வேறு நிறுவனங்களில் இருந்து குடிநீர் விநியோகம் செய்வதற்காக ஏராளமான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தண்ணீர் வண்டிகளை வயது குறைந்த சிறுவர்கள், வாலிபர்கள் இயக்கி வருகின்றனர். அவர்கள் வேகமாக வாகனங்களை இயக்குவதால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. தண்ணீர் வாகனம் ஓட்டும் பலர் ஓட்டுனர் உரிமம் எடுக்காமல் வண்டிகளை ஓட்டி வருகின்றனர். எனவே காவல்துறை அதிகாரிகள், தண்ணீர் கொண்டு செல்லும் வாகனங்களை ஆய்வு செய்து, ஓட்டுனர்கள் உரிமம் பெற்றுள்ளனரா என்று கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!