விருதுநகரில், வருவாய்த் துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர்
KKSSRR House-விருதுநகர் அருகேயுள்ள பாலவநத்தம் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு, அரசு விழாவில் வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது கலாவதி (50) என்ற பெண், தனது தாயாருக்கு முதியோர் உதவி தொகை வழங்கக்கோரி அமைச்சரிடம் மனு கொடுத்தார்.
அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்த அமைச்சரிடம், கலாவதி மனு குறித்து தொடர்ந்து பேசியுள்ளார். இதனால் கலாவதியின் தலையில், கையில் வைத்திருந்த மனுவால் தட்டிய அமைச்சர் சற்று பொறுங்கள் என்று கூறினார். பின்னர் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தப் பெண்ணிடம் அமைச்சர் கூறிச் சென்றார்.
இந்த நிலையில் மனு கொடுக்க வந்த பெண்ணின் தலையில், அவர் கொடுத்த மனுவால் அமைச்சர் தாக்கினார் என்று வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மறுநாள் மனு கொடுத்த கலாவதி, அமைச்சர் தனக்கு மிகவும் தெரிந்தவர் என்றும், அவர் தன்னை தாக்கவில்லை என்றும், மனுமீது நடவடிக்கை எடுப்பதாக கூறி மனுவைக் கொண்டு தலையில் லேசாக தட்டினார் என்றும் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். மேலும் தனது தாயாருக்கு உதவி தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும் கலாவதி கூறினார்.
இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பெண்ணின் தலையில் பேப்பரால் தாக்கிய அமைச்சர் ராமச்சந்திரன் 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும். இல்லையென்றால் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார்.
பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில், அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவதற்காக பாஜக கட்சியினர் திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி செல்ல முயன்ற பாஜக கட்சியினரை போலீசார் கைது செய்தனர். அமைச்சர் வீட்டை முற்றுகையிட சென்ற மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மேலிட பார்வையாளர் வெற்றிவேல் உட்பட 160 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் சிவகாசியிலிருந்து, விருதுநகருக்கு பாஜக கட்சியினர் செல்வதற்கு தயாராகினர். அவர்களை திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் தடுத்து நிறுத்தினர். திருத்தங்கல்லில் பாஜக கட்சியைச் சேர்ந்த 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாஜக கட்சியின் மகளிர் அணியினர், விருதுநகருக்குச் செல்வதை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் சாலை மறியல் செய்யமுயன்ற 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
அமைச்சர் ராமச்சந்திரன் வீட்டை முற்றுகையிடச் செல்ல முயன்ற, விருதுநகர் மாவட்ட பாஜக கட்சியினர் 280 பேரை போலீசார் கைது செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu