ராஜபாளையம் அருகே அமைச்சர் தலைமையில் கிராம சபைக் கூட்டம்

ராஜபாளையம் அருகே அமைச்சர் தலைமையில் கிராம சபைக் கூட்டம்
X

தோனுகால் ஊராட்சியில், கிராம சபைக் கூட்டம்.

ராஜபாளையம் அருகே தோணுகால் ஊராட்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடந்தது

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் தோணுகால் ஊராட்சியில், காந்தி ஜயந்தியை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் தோணுகால் ஊராட்சியில்; (02.10.2023) காந்தி ஜயந்தியை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் “எல்லாருக்கும் எல்லாம் “ என்ற கருத்தை மையமாகக் கொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், முன்னிலையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, தலைமையில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர், “எல்லாருக்கும் எல்லாம் “ என்ற கருத்தில் உரையாற்றிய காணொலி காட்சியினை அனைவரும் பார்வையிட்டனர்.

இக்கிராமசபை கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,

கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தொழிலாளர் வரவு செலவு திட்டத்தினை செப்டம்பர் 30 -ம் தேதி வரையிலான முன்னேற்ற அறிக்கையுடன் ஒப்பிடுதல்,

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் தேர்வு செய்யப் பட்டுள்ள பணிகள், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்வது உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப் பட்டது.

இக்கூட்டத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு பேசியதாவது::

இந்திய திருநாட்டின் விடுதலைக்காக போராடி விடுதலையை பெற்று தந்த, விடுதலைக்குப் பிறகு நம்முடைய நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக தன்னுடைய இன்னுயிரையும் தியாகம் செய்த அண்ணல் காந்தியடிகள் 155-வது பிறந்த நாளில் இந்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப் படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான அரசு கிராமங்களுக்கு உயிர்நாடியாக இருக்கக் கூடிய இந்த கிராம சபை கூட்டங்களை நடத்துவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறது. இந்த கூட்டங்களின் வாயிலாக மக்களுடைய கருத்துகளை நேரடியாக அறிந்து கொண்டு திட்டங்களை தீட்டுவதில் அரசு எந்த அளவுக்கு முனைப்பு காட்டுகிறது என்பது முதலமைச்சர், காணொலியில் உரையாற்றுவதன் மூலம் அறிய முடிகிறது.

அண்ணல் காந்தியடிகள் சொன்னதைப் போல் இந்தியாவினுடைய இதயம் கிராமங்களில் இருக்கிறது. நம்முடைய வளர்ச்சி கிராமங்களில் இருந்து துவங்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சி, அடிப்படை கட்டுமான வளர்ச்சி என எதுவாயினும் அதனுடைய அடிநாதம் கிராமமாக இருக்க வேண்டும் என்கின்ற தத்துவத்தின் அடிப்படையில் கிராமங்களில் இருந்து நம்முடைய திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.

மக்களிடத்தே செல், மக்களிடத்திலே இருந்து கற்றுக்கொள், அவர்கள் என்ன வைத்திருக்கிறார் களோ அதிலிருந்து ஆரம்பி என, பேரறிஞர் அண்ணா, நமக்கு போதித்த மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இந்த கிராம சபை கூட்டமும் இன்றைக்கு உங்களிடத்தில் இருந்தே துவங்கி, உங்களிடத்தில் உள்ள கருத்துக்களை கேட்டு நடைபெற்று வரும் பணிகள், கிராமத்தினுடைய வளர்ச்சிக்கு தேவையான பணிகள் நிறைவேற்றுவதற்கு ஆக்கப்பூர்வமான யோசனைகள், ஆலோசனைகளை உங்களிடத்திலே பெறப்பட்டு, போதுமான திட்டங்களை வகுப்பதற்கு இந்த கிராம சபை கூட்டப்படுகிறது.

எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்க்க கூடிய அரசின் அடிப்படை கருப்பொருளாகும். எல்லாவற்றையும் எல்லோருக் கும் சமமான முறையில் கிடைக்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த ஒரு வளர்ச்சியாக இந்த வளர்ச்சி இருக்க வேண்டும். சமுதாயத்தினுடைய எந்த பிரிவு மக்களும் இந்த வளர்ச்சியில் விட்டுப் போய் விடக்கூடாது. ஒரு ஊராட்சியில், இருக்கக்கூடிய அனைத்து கிராமங்களும் சமச்சீரான வளர்ச்சியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

தோணுகால் ஊராட்சியில், பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதிகள் மூலம் இதுவரை சுமார் ரூ.3.92 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2023-24 நடப்பாண்டில் ரூ.2.80 கோடி மதிப்பில் 12 பணிகள் 723 பயனாளிகள் பயன்பெறும் வகையில், நடைபெற்று வருகிறது. இன்னும் பல பணிகள் நடைபெறக்கூடிய தேவைகளும் இந்த ஊராட்சியில் இருக்கின்றன. எனவே, உங்களுடைய கருத்துகளை ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கூறும் பட்சத்தில், வரக்கூடிய காலங்களில் அவற்றை ஆலோசித்து அதற்கான திட்ட பணிகளை நமது கிராமத்தில் உருவாக்குவதற்கும் ஒரு நல்ல வாய்ப்பு ஏற்படுத்த முடியும் என்றார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் ஆறு முறை கிராமசபை கூட்டங்கள் தமிழகத்தில் அனைத்து கிராமங்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கிராம சபை கூட்டத்தில் ஒவ்வொரு முறையும் ஒரு சிறப்பு கருத்துகளை மையமாக வைத்து கூட்டம் நடைபெறுகிறது. இந்த முறை அக்டோபர் 2 மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான இன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் “எல்லோருக்கும் எல்லாம்” கருத்தை மையமாக கொண்டு நடைபெறுகிறது.

நமது திட்டங்கள், வளர்ச்சி பணிகள், இயற்கை வளங்கள் அதனுடைய நன்மைகளும் எல்லா மக்களுக்கும் எந்த விதமான பாலின, சமூக, சமய வேறுபாடு இன்றி கிடைத்திட வேண்டும். அதற்கு கிராம மக்கள் எல்லாம் ஒருங்கிணைந்து ஒரே சமூகமாக எந்த வேறுபாடுகளும் இல்லாமல் கிராமத்தினுடைய நலத்திற்காக, வளர்ச்சி பணிகளுக்காக, சமூகத்தின் விளிம்பு நிலையில் அடித்தட்டு நிலையில் இருக்கக்கூடிய மக்களை பயனாளிகளாக முறையாக தேர்ந்தெடுக்கவும்,

கிராமத்தில் இருக்கக்கூடிய அரசினுடைய நிதி ஆதாரங்கள் கிராமத்தினுடைய நிதி ஆதாரங்களை எல்லாம் அனைத்துப் பகுதி மக்களுக்கும் சரியாகவும், நியாயமாகவும் சென்று சேர்வதை உறுதி செய்வதற்கும், புதிதாக கிராமத்தினுடைய வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை தீட்டுவதற்கும், பொது மக்கள் அனைவரும் இணைந்து இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று அவர்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம்.

மேலும், இந்த கிராமத்தில் இருக்கக்கூடிய பொதுவான பிரச்னைகளை கூறி விவாதித்து முடிவுகளை எடுப்பதற்கும் இந்த கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. எனவே, இந்த கிராம சபையில் எடுக்கக்கூடிய தீர்மானங்கள், விவாதிக்கக் கூடிய விவாத பொருட்களை, பொதுமக்கள் பங்களிப்போடு விவாதம் செய்து, அதில் முடிவுகள் எடுக்கவும், புதிய திட்டங்களுக்கான முன்மொழிவுகளை கருத்துக்களை தெரிவிக்கவும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.

இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விசாலாட்சி, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர்(பொ) வித்யா, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் முத்துமாரி, காரியாபட்டி பேரூராட்சித்தலைவர் ,செந்தில், ஒன்றியக்குழுத் துணைத்தலைவர்.இராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் .தங்க தமிழ்வாணன், ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராம பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!