விருதுநகர் சாலை விபத்து: இரண்டு தொழிலாளிகள் உயிரிழப்பு

விருதுநகர் சாலை விபத்து: இரண்டு தொழிலாளிகள் உயிரிழப்பு
X
விருதுநகர் அருகே, கார் மோதிய விபத்தில், விவசாயப் பணிக்கு வந்த 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்

விருதுநகர் அருகேயுள்ள செங்குன்றாபுரம் பகுதியில் விவசாயப் பணிகள் செய்வதற்காக, மதுரை மாவட்டம் முருகனேரி பகுதியிலிருந்து 20 தொழிலாளர்கள் வந்திருந்தனர். நாற்று நடும் பணிகளை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பிச் செல்வதற்காக செங்குன்றாபுரம் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள பாலத்தில் ஓரமாக அமர்ந்திருந்தனர்.

அப்போது அந்த வழியாக வத்திராயிருப்பில் இருந்து, விருதுநகருக்கு சென்று கொண்டிருந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி, பாலத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்த முருகனேரி பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வி (45), பேச்சியம்மாள் (54), செல்வவதி (55), பாண்டியம்மாள் (40), பாப்பா (50) ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் முத்துச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பேச்சியம்மாள் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து ஆமத்தூர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து, கார் ஓட்டுநர் தென்காசி மாவட்டம், தென்மலையைச் சேர்ந்த ராஜ்குமார் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாய கூலி வேலைக்கு வந்த பெண்கள் இரண்டு பேர், கார் மோதி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!