சிவகாசி அருகே தகராறில் இரு பெண்கள் கொலை

சிவகாசி அருகே தகராறில் இரு பெண்கள்  கொலை
X

பைல் படம்

மாநகராட்சியில் வாரிசு வேலை பெறுவதில் ஏற்பட்ட தகராறில் 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

சிவகாசி அருகே மாநகராட்சியில் வாரிசு வேலை பெறுவதில் ஏற்பட்ட தகராறில்2 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் வசித்து வந்தவர் முருகேஸ்வரி (50). இவரது மகன் ரவி, சிவகாசி மாநகராட்சியில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். ரவிக்கு திருமணம் நடந்து ரதிலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரவி, திடீரென்று இறந்து போனார். இந்த நிலையில், மாநகராட்சியில் கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணியை பெறுவதற்காக ரதிலட்சுமி, தனது மாமியார் முருகேஸ்வரியிடம் வாரிசு சான்றிதழில் கையெழுத்து போட்டுத் தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த முருகேஸ்வரி, கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணியை தனது பேரன் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று கூறி வந்தார். இதனால் இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு வந்தது. ரதிலட்சுமிக்கு ஆதரவாக அவரது சகோதரர் காளிராஜன் பேசி வந்தார். இன்று காலை அதே பகுதியில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் வைத்து இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்துள்ளது. அப்போது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த காளிராஜன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகேஸ்வரியை சரமாரியாக குத்தினார். இதனை தடுக்க முயன்ற இவர்களது உறவினர் கருப்பாயிதமயந்தி (60) என்ற மூதாட்டியையும் காளிராஜன் கத்தியால் குத்தினார். கத்தி குத்தில் படுகாயமடைந்த இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட காளிராஜன், திருத்தங்கல் காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று முருகேஸ்வரி, கருப்பாயிதமயந்தி சடலங்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருணை அடிப்படையில் கிடைக்கும் வேலைக்காக, குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டு அதனால் இரண்டு பெண்கள் படுகொலையான சம்பவம், சிவகாசி பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!