நீரோடையில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

நீரோடையில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு
X

பைல் படம்

ராஜபாளையம் அருகே ஓடையில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாப உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்

ராஜபாளையம் அருகே ஓடையில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள எஸ்.ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்கராஜ். இவரது மகன் சிவபிரசாத் (10). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். இதே போல தென்காசி மாவட்டம், பால்வண்ணநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராமராஜன். இவரது மகன் சரண் (13). இவர் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது தேர்வுகள் முடிந்து பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சரண், கோடை விடுமுறைக்காக எஸ்.ராமலிங்கபுரத்தில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று, அந்தப் பகுதியில் இருந்த சிறுவர்கள், சிவகாமியாபுரம் அரசுப்பள்ளி அருகேயுள்ள ஓடையில் இறங்கி குளித்தனர்.

அப்போது ஓடையின் ஆழமான பகுதிக்குச் சென்ற சரண், சிவபிரசாத் இருவரும் நீருக்குள் மூழ்கினர். இதனைப் பார்த்து அவர்களுடன் சென்றவர்கள் கத்தி கூச்சலிட்டதைப் பார்த்து அந்தப் பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து, நீருக்குள் மூழ்கிய சிறுவர்களை மீட்டனர்.

ஆனால் நீரில் மூழ்கிய சிறுவர்கள் இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, ஓடை நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு