பாலியல் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்: தேமுதிக ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் தேமுதிக கட்சி சார்பில், விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், சொத்துவரி உயர்வை குறைக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா பேசும்போது, விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் தண்டனை, எதிர்காலத்தில் பெண்களை வன்கொடுமை செய்ய நினைப்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும். பெண்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் என்று பேசினார்.
மேலும் பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்த்தப்படுவதால் சாமானிய மக்களின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது. டீசல் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்து வாகனங்களின் வாடகை உயர்வு ஏற்பட்டு, அதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பதற்கு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார். மேலும் ஏற்கனவே கொரோனா தொற்று காரணங்களாலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தாலும் மக்கள் கஷ்டத்தில் இருக்கும்போது, தமிழக அரசு சொத்து வரிகளை கடுமையாக உயர்த்தி உள்ளது. இதனை மறுபரிசீலனை செய்து, சொத்து வரிகள் உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாமானிய, நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்காக தேமுதிக கட்சி எப்போதும் துணையாக இருக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தலைமை நிலைய நிர்வாகி பார்த்தசாரதி, மேற்கு மாவட்ட செயலாளர் செய்யது காஜாசெரிப், அவைத்தலைவர் ஜெயபாண்டியன் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu