ராஜபாளையம் அருகே யானை தந்தங்கள் பறிமுதல்: வனத்துறையிடம் ஒப்படைப்பு
ராஜபாளையம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள்.
இராஜபாளையம் அருகே, 23 கிலோ எடையுள்ள இரு யானை தந்தங்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இரண்டு பேரை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே யானை தந்தம் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகள் இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் விசாரணை நடத்தினர். விசாரணையில், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் யானை தந்தம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சோதனை செய்த அதிகாரிகள் இருவரை கைது செய்து, அவர்களிடம் இருந்து தலா 120 செ.மீ உயரமுள்ள 23 கிலோ எடையிலான இரு தந்தங்களை பறிமுதல் செய்தனர். இருவரையும் இராஜபாளையம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரித்த போது, இராஜபாளையம் பி.எஸ்.கே நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் முருகன்(34) என்பவர் அலுவலக மாடியில் இருந்து கீழே குதித்து தப்பி ஓட முயன்ற போது, அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை அதிகாரிகள் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.
இதையடுத்து இரு யானை தந்தங்களையும், பிடிபட்ட இருவரையும் இராஜபாளையம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரித்ததில், கடத்தலில் சம்பந்தப்பட்ட மேலும் 6 பேரை கைது செய்து வனத்துறை அலுவலகத்தில் வைத்து உதவி மாவட்ட வன அலுவலர் நிர்மலா, இராஜபாளையம் வனச்சரகர் சரண்யா ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
இராஜபாளையம் அய்யனார் கோவில் வனப்பகுதியில் யானை வேட்டையாடப்பட்டதா, அல்லது தந்தங்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்புடைய ஐந்து பேரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu