ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி துணை தலைவரை கண்டித்து சாலை மறியல்
சாலை மறியல் போராட்டம் நடத்திய கிராம மக்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி நிர்வாகத்தை துணைத்தலைவர் கவனிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட, கீழராஜகுலராமன் பகுதியைச் சேர்ந்தவர் பொன் பாபாபாண்டியன் (50). இவரது மனைவி ரூபாராணி (45). பொன் பாபாபாண்டியன் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது மனைவி ரூபாராணி பெயரில் வீடு கட்டுவதற்காக வரைபட அனுமதி கேட்டு கீழராஜகுலராமன் ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தார்.
அதற்கு ஊராட்சி தலைவர் காளிமுத்து வரைபட அனுமதி வழங்குவதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து பொன் பாபாபாண்டியன் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி ரசாயன பவுடர் தடவிய 6 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை வாங்கிய போது ஊராட்சி தலைவர் காளிமுத்துவை, லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், ஆய்வாளர்கள் சால்வன்துரை, பூமிநாதன் மற்றும் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் கைதான நிலையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.இதன் காரணமாக கீழராஜகுலராமன் ஊராட்சி நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பு துணைத்தலைவர் குருவையா மற்றும் எழுத்தர் கருத்தப்பாண்டியன் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கீழராஜகுலராமன் ஊராட்சி நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பை துணைத்தலைவர் மற்றும் எழுத்தருக்கு கொடுக்கப்பட்டதை கண்டித்தும், ஊராட்சி நிர்வாகத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் கவனிக்க வலியுறுத்தியும், கீழராஜகுலராமன் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை திரண்டு வந்து ராஜபாளையம் - வெம்பக்கோட்டை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
காலை நேரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடந்ததால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த, வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ராமநாதன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu