ராஜபாளையத்தில் சாலைப்பணிகளை தடுத்து நிறுத்திய ரயில்வே: மக்கள் போராட்டம்
தார் சாலை போடுவதை தடுக்கும் ரயில்வே அதிகாரிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையத்தில் சாலைப் பணிகளை தடுத்து நிறுத்திய ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பாதையின் வழியாக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக குழாய்கள் பதிக்க சாலை தோண்டப்பட்டதால், அந்தப் பகுதி முழுவதும் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. லேசான மழை பெய்தால் கூட இந்தச் சாலை சேறும், சகதியுமாக மாறி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விடுகிறது. . குண்டும், குழியுமான சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துகளில் சிக்கி காயமடைந்து வருவது தொடர்கதையாக உள்ளது. இதனால் இந்த மாற்றுப் பாதையை சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து ராஜபாளையம் நகராட்சி சார்பில் அங்கு தார்ச்சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. இதனையறிந்த ரயில்வே அதிகாரிகள் அங்கு வந்து தார்ச் சாலை அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு கூறினர். ரயில்வே மேம்பாலப் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், அந்தப் பகுதியில் தார்ச் சாலை போடக் கூடாது என்று அதிகாரிகள் கூறினர். இதனால் மாற்றுப் பாதையை பயன்படுத்தி வரும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தார் சாலை போடுவதை தடுக்கும் ரயில்வே அதிகாரிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அந்தப்பகுதி பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சாலை மறியல் போராட்டத்தால் அந்தப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் ரயில்வே அதிகாரிகள், மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். நிறுத்தப்பட்டிருக்கும் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு, விரைவாக முடிக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த திடீர் சாலை மறியலால், ராஜபாளையம் - கணபதியாபுரம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu