ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பொதுமக்கள் சாலைமறியல்

அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள எஸ். ராமலிங்கபுரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில், போதுமான அளவு குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இது வரை செய்து தரப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், 'ஜல்ஜீவன்' திட்டத்தில் குழாய் பதிக்க பொதுமக்கள் அளிக்கும் ரூ. 1800 வைப்பு தொகைக்கான ரசீது முறையாக வழங்கப்படவில்லை எனவும், ஏற்கெனவே ரூ. 5 ஆயிரம் வரை பணம் கட்டிய மக்களுக்கு, பல மாதங்களாகியும் இது வரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. பல தெருக்களில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலைகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சாலை முழுவதும் குண்டும் குழியுமாக, கற்கள் நிறைந்து காணப்படுகிறது.
இதுகுறித்து, ஊராட்சி தலைவர் புஷ்பவல்லியிடம் கேட்டதற்கு, அவர் முறையான பதிலளிக்காமல் பொதுமக்களை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டி, இன்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சாலையின் இரண்டு புறமும் வாகனங்கள் தேங்கி நின்றதால், மாணாக்கர்களுடன், ஆலைத்தொழிலாளர்களும் வேலைக்கு செல்ல முடியாமல் அவதியுற்றனர்.
தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
ஊராட்சித் தலைவர் நேரில் வந்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிட பொதுமக்கள் மறுப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்ற அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக் கொண்ட பொது மக்கள், போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் சமுசிகாபுரம் - முதுகுடி சாலையில் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu