திமுக எப்போதும் வன்முறையை ஆதரிக்காது: அமைச்சர் உதயநிதி

திமுக எப்போதும் வன்முறையை ஆதரிக்காது: அமைச்சர் உதயநிதி
X

விருதுநகரில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

திமுக எப்போதும் வன்முறையை ஆதரிக்காது என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள, திமுக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, திமுக கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசும்போது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களிடமிருந்து மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இவற்றின் மீது அதிகாரிகள் முழுமையான ஆய்வுகள் செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள். தகுதியுள்ள அனைவருக்கும் நிச்சயம் உரிமைத் தொகை பணம் கிடைக்கும் என்று கூறினார்.

மேலும் தமிழக ஆளுநர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து, ஆளுநர் மாளிகையில் இருந்து காவல்துறைக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொடுத்துள்ள புகாரில் தவறான கருத்துகள் உள்ளன. திமுக கட்சியை பொருத்தவரை எப்போதும் வன்முறைக்கு ஆதரவாக இருக்காது. வன்முறை மற்றும் தீவிரவாத செயல்களை திமுக ஒருபோதும் ஆதரித்தது இல்லை, ஆதரிக்கவும் மாட்டோம். கருத்துகளுக்கு பதில் கருத்துகள் சொல்வது தான் திமுக கட்சியின் வழக்கம்.

ஆளுநர் மாளிகை முன்பு நடந்த சம்பவம் என்ன என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறை உடனடியாக கைது செய்துள்ளனர். பெரிய அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் காவல்துறை சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. மற்றபடி இந்த சம்பவத்தை ஆளுநர் அரசியலாக்கப் பார்க்கிறார். இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை எல்லாம் மீறித்தான், திமுக கட்சி இன்றும் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!