ராஜபாளையத்தில், மரத்தடியில் நடக்கும் வகுப்புகள்: ஆட்சியர் கண்டு கொள்வாரா?

ராஜபாளையத்தில், மரத்தடியில் நடக்கும் வகுப்புகள்: ஆட்சியர் கண்டு கொள்வாரா?
X

ராஜபாளையத்தில், அரசு பள்ளியில்  மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பாடம் கற்கின்றனர். 

அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் நலன் கருதி, கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடத்தை உடனடியாக திறக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபாளையம் :

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர், காமராஜர் நகர் பகுதியில், முத்துசாமிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளி உள்ளது.

இந்தப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றர். இந்த நிலையில் பள்ளியின் வகுப்பறை கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்து இருந்ததால், உடனடியாக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு இந்தப் பகுதி மக்கள், தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் காமராஜர் நகர் தொடக்கப்பள்ளிக்கு, சுமார் 32 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. தொடக்கப்பள்ளி மாணவர்களின் கல்வி வசதிக்காக, தனியார் பள்ளிகளில் இருப்பதைப் போல ஸ்மார்ட் வகுப்பறையுடன் இந்தப் பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கட்டிடப் பணிகள் முடிந்து 4 மாதங்களான நிலையிலும் இன்னும் புதிய கட்டிடங்கள் திறக்கப்படாமல் உள்ளது.


இதனால் பள்ளி ஆசிரியர்கள் மரத்தின் கீழ் மாணவர்களை அமர வைத்து பாடங்களை நடத்தி வருகின்றனர். இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசு தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறையுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. புதிய பள்ளி கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க இருக்கிறார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

விரைவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக இந்த அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை திறந்து வைப்பார் என்று கூறினர். மாணவர்கள் கடும் வெயிலிலும் மழையிலும் மரத்தடியில் அமர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் இது குறித்து உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, பள்ளி வகுப்பறை கட்டிடம் முழுமையாக செயல்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story