சிவகாசி அருகே பண மோசடி செய்ததாக பாஜக நிர்வாகி கைது

சிவகாசி அருகே பண மோசடி செய்ததாக பாஜக நிர்வாகி கைது
X
பண மோசடியில் ஈடுபட்டதுடன் கொலை மிரட்டலும் விடுத்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி சத்யராஜை கைது செய்தனர்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், ஆலாவூரணி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (42). பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர், விருதுநகர் மேற்கு மாவட்ட, அரசு தொடர்பு பிரிவு செயலாளராக பொறுப்பில் உள்ளார்.

சத்யராஜ், அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை, திருத்தங்கல்லைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கு கிரயம் முடித்து பத்திரப்பதிவு செய்து தருவதாகக் கூறி அவரிடம் 2 தவணையாக 51 லட்சம் ரூபாயை வாங்கியுள்ளார்.

ஆனால் சொன்னபடி நிலத்தை பத்திரம் பதிவு செய்து தராமல் ஏமாற்றி வந்தார். எனவே தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தருமாறு சத்யராஜிடம், ஈஸ்வரன் பல முறை கேட்டுள்ளார். பணத்தை திருப்பி தராத சத்யராஜ், ஈஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஈஸ்வரன், திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

வழக்குபதிவு செய்த போலீசார், பண மோசடியில் ஈடுபட்டதுடன் கொலை மிரட்டலும் விடுத்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி சத்யராஜை கைது செய்தனர். சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அமலநாத கமலக்கண்ணன் முன்பு சத்யராஜை போலீசார் ஆஜர்படுத்தினர். சத்யராஜை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில், பண மோசடியில் ஈடுபட்ட பாஜக கட்சி நிர்வாகி சத்யராஜ், விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
why is ai important to the future