செம்பட்டியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்: அமைச்சர் துவக்கி வைப்பு
செம்பட்டியில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமினை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், செம்பட்டியில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி, தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
பின்னர், சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றிய 3 விவசாயிகளுக்கு சிறந்த கால்நடை வளர்ப்பு மேலாண்மைக்கான விருதுகளையும், கிடேரி கன்று பேரணி நடத்தப்பட்டு சிறந்த 3 கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகளையும், 10 விவசாயிகளுக்கு கால்நடை தீவனபயிர்களையும், 50 கால்நடை வளர்ப்போருக்கு தாது உப்பு கலவையினையும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் வழங்கினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் பேசியபோது:- கால்நடை பராமரிப்புத்துறை மூலம் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ஒரு ஒன்றியத்திற்கு மாதத்திற்கு 5 வீதம் மொத்தம் 220 முகாம்கள் (டிசம்பர் முதல் மார்ச் 2022 வரை ) நான்கு மாதங்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமிற்கு திட்ட செலவினமான மருந்துகள், ஹார்மோன்கள் மற்றும் தாது உப்புக்கலவைகள் வழங்குதல் போன்றவைகளுக்கு ஒரு முகாமிற்கு ரூ.10,000/ வீதம் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இம்முகாமில் அல்ட்ரா சவுண்ட் எப்கேனர் கருவி மூலம் கால்நடைகளுக்கு பரிசோதனை மேற் கொள்ளப்படுகிறது. தாது உப்புக்கலவைகள் மற்றும் செயற்கைமுறை கருவூட்டல் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல் குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை ஆய்வு, சுண்டு வாத அறுவை சிகிச்சை, கருப்பை மருத்துவ சிகிச்சைகள் போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்கள் தாதுஉப்பு கலவைகள் வழங்கல் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த முகாமின்போது, அறுவை சிகிச்சை, கால்நடை பேறுகால உதவிகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளை அடையாளம் கண்டு, அவற்றை தொடர் சிகிச்சைக்காக அருகில் உள்ள கால்தடை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே, இந்த சிறப்பு முகாமினை விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர்கள் பயன்படுத்தி முகாம்கள் நடத்தப்படும் கிராமங்களில் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து பயன்பெறுமாறு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்த சிறப்பு முகாமில் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள், உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பணிகளை மேற்கொண்டனர். இந்த முகாமில் பங்கேற்ற 500-க்கும் அதிகமான கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, சினையுறா மாடுகளுக்கான சிறப்பு சிகிச்சை, காப்பீடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சிறு அறுவை சிகிச்சை, நோய்த் தடுப்பு பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை கால்நடை பராமரிப்பு துறையினர் மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்ரமணியன், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ரவிசந்திரன், துணை இயக்குநர் கோவில்ராஜா, அருப்புக்கோட்டை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் உட்பட கால்நடை மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu