அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் மகளிர் ஆணைய தலைவர் விசாரணை

அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் மகளிர் ஆணைய தலைவர் விசாரணை
X

அன்புஜோதி ஆசிரமத்தில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் மாநில மகளிர் ஆணைய தலைவர் நேரடி விசாரணை நடத்தினார்.

அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி அருகே குண்டலபுலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் 2 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதியாகி உள்ளது என்றும், ஆசிரம வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறும் என்றும் மாநில மகளிர் ஆணைய தலைவர் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் இயங்கி வந்தது. இதை கேரள மாநிலம் எர்ணாவூர் ஆழக்கூடாவை சேர்ந்த ஜூபின்பேபி மற்றும் அவரது மனைவி மரியாஜூபின் ஆகியோர் நிர்வகித்து வந்துள்ளனர். ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களில் திருப்பூரை சேர்ந்த ஜபருல்லா என்பவர் மாயமானதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த்துறை மற்றும் போலீசார் ஆசிரமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், உரிய அனுமதியின்றி ஆசிரமம் இயங்கியதும், அங்கு தங்கியிருந்த பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை, குரங்குகளை விட்டு கடிக்கவைப்பது, சித்ரவதை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகார்களின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜூபின்பேபி உள்பட 9 பேரை கைது செய்தனர்.

அங்கிருந்து மீட்கப்பட்ட 143 பேருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பல்வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ஆஸ்பத்திரியில் 16 பெண்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இ்ந்த நிலையில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து, அங்கு சிகிச்சை பெற்று வரும் பெண்களிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பெண்களிடம் விசாரித்த போது, 2 வடமாநிலத்தை சேர்ந்த பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது. மேலும் பல பெண்கள் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதோடு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த பலரை அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார். கண்டிப்பாக நேர்மையான விசாரணை நடைபெறும். எங்களின் ஆய்வு, விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பிப்போம். ஆசிரமத்தில் காணாமல்போனவர்களின் பெயர் பட்டியல் இதுவரை கொடுக்கப்படவில்லை. விசாரணையின் முடிவுக்குள் பெயர் பட்டியல் பெற்று அரசிடம் ஒப்படைப்போம். காப்பகத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களை உறவினரிடம் சேர்க்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருகிறார். காப்பகத்தில் இருந்து காணாமல்போனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் விருப்பத்தின் பேரில் இங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், காணாமல் போனவர்கள் பற்றி உறவினர்கள் கொடுக்கும் புகார்களை முறையாக பெற மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தெரிவித்துள்ளேன். மாநிலத்தில் உள்ள ஆதரவற்றோர் காப்பகம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அங்குள்ள குறைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து சரி செய்வதற்கு உத்தரவிட்டுள்ளோம். இது போன்ற காப்பகங்களை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. இனிமேல் காப்பகங்களை அரசே ஏற்று நடத்த முதல்-அமைச்சரிடம் பரிந்துரை செய்ய உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பழனி, மருத்துவ கல்லூரி முதல்வர் சங்கீதா, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜாம்பாள், நிலைய மருத்துவ அலுவலர் வெங்கடேசன், மனநலத்துறை தலைவர் டாக்டர்புகழேந்தி, மகளிர் துறை தலைவர் டாக்டர் ராஜேஸ்வரி, மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் சீதாபதி சொக்கலிங்கம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவராஜ், காவல் ஆய்வாளர் விநாயக முருகன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!