பெண்களுக்கு முன்னேற்றம் கிடைக்கவில்லை; நீதிபதி ஆதங்கம்
மாவட்ட நீதிபதி பூர்ணிமா. (கோப்பு படம்)
பெண்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் இன்னமும் முன்னேற்றம் கிடைக்கவில்லை என்று, விழுப்புரத்தில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் மாவட்ட நீதிபதி பூர்ணிமா ஆதங்கம் தெரிவித்தார்.
விழுப்புரம் நீதிமன்றத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட நீதிபதி பூர்ணிமா கலந்துகொண்டு பேசுகையில்,
பழங்காலத்தில் ஆண்களும், பெண்களும் சமமாகவே இருந்தனர். பின்னர் வந்த வேதகாலத்தில்தான், பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. பெண்கள் உடல் வலுவில்லாதவர்கள், அவர்கள் வீட்டு வேலைக்குத்தான் சரிபடுவார்கள் என்று திருமணம் செய்து வைத்து குடும்ப வாழ்க்கைக்கு அனுப்பிவிட்டனர்.
படிப்படியாக அதன் பிறகு 19-ம் நூற்றாண்டுக்கு பிறகு பெண்களுக்கான முன்னேற்றம், சம உரிமை போன்றவை கிடைக்கத்தொடங்கியது. ராஜாராம் மோகன்ராய், விவேகானந்தர், பாரதி போன்றோர், பெண்ணுரிமைக்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டதன் விளைவாக சம உரிமை படிப்படியாக கிடைத்து வருகிறது. இதன் மூலம் உடன்கட்டை ஏறுதல் போன்றவை முடிவுக்கு வந்தது. இன்றைக்கு அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனையாளர்களாக திகழ்ந்து வருகின்றனர். பெண்களுக்கான சம உரிமை கிடைக்க பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பெண்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் இன்னும் முன்னேற்றம் கிடைக்கவில்லை.
சமூகத்திலும், வீடுகளிலும் சமமாக நடத்தப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்து வருவது தடுக்கப்பட வேண்டும், பெண் விடுதலை வேண்டும். அதே நேரத்தில் அதை தவறாகவும் பயன்படுத்தக்கூடாது. ஆணும் பெண்ணும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். பெண்கள் இன்னும் பல துறைகளில் முன்னேற்றம் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu