ஏரியாக மாறிய விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்
மழைநீர் தேங்கியதால் குளம் போல் காட்சியளிக்கும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், வட மற்றும் உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் பரவலாக மழை பெய்த நிலையில், இரவிலும் பல இடங்களில் கனமழை பெய்தது.
காலையிலும் ஆங்காங்கே மழை பெய்ததால், மாணவ- மாணவிகளின் நலனை கருதி முன்எச்சரிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்தது. இடி-மின்னலுடன் பலத்த மழை தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு மேல் விழுப்புரம் பகுதியில் சாரல் மழை பெய்தது. பின்னர் மாலை 2.30 மணியளவில் இடி- மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
மரக்காணம், ஆரோவில், கோட்டக்குப்பம், செஞ்சி, மேல்மலையனூர், திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து, மாலை 5 மணிக்கு பிறகும் இரவு வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது.
இந்த மழை காரணமாக விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலை, நேருஜி சாலை, திரு.வி.க. சாலை உள்ளிட்ட நகரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது.
மேலும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தண்ணீர், குளம்போல் தேங்கியதால் பயணிகள் சிரமப்பட்டனர். அதுபோல் கீழ்பெரும்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதையிலும் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றதால் அவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அதன் பின்னர் நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மின் மோட்டார் மூலம் புதிய பேருந்து நிலையம், கீழ்பெரும்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நின்ற தண்ணீரை வெளியேற்ற வழிவகை செய்தனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே வடகிழக்கு பருவமழையின் போதும் அவ்வப்போது பெய்யும் கனமழையின் போதும் விழுப்புரம் நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதும் அது தானாகவே வெளியேறுவதும் தான் வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், கீழ்ப்பெரும்பாக்கம் ரயில்வே மேம்பாலம் இங்கெல்லாம் எப்பொழுதெல்லாம் மழை பெய்கிறதோ அப்போதெல்லாம் ஏரி, குளங்கள் போல் தண்ணீர் தேங்கி விடுவதும்
இதில் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதும் வாடிக்கையாக ஒன்றான உள்ளது. இதனை நிரந்தர தீர்வு கண்டு தண்ணீர் தேங்காதவாறு உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
மழை அளவு விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- மரக்காணம்- 68, விழுப்புரம்- 26, செஞ்சி- 17, முண்டியம்பாக்கம்- 13.20, நேமூர்- 11, திருவெண்ணெய்நல்லூர்- 9, அனந்தபுரம்- 9, கஞ்சனூர்- 8.50,வளத்தி- 8.20, கெடார்- 6, சூரப்பட்டு- 6, செம்மேடு- 5.20, கோலியனூர்- 3, அரசூர்- 3, திண்டிவனம்- 2, வளவனூர்- 2, அவலூர்பேட்டை- 1.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu