இலக்கினை அடைய செய்யவேண்டியது என்ன? விழுப்புரம் கலெக்டர் 'காபி வித் ஸ்டூடன்ஸ்'
கவனம் சிதறாமல் லட்சியத்தை அடைய தன்னம்பிக்கையுடன் கல்வி பயில வேண்டும் என்று மாணவர்களுக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடல் (காபி வித் கலெக்டர்) நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது மாணவ- மாணவிகளிடம் தனித்தனியாக ஒவ்வொருவரின் பெயர், படிக்கும் வகுப்பு, குடும்ப சூழ்நிலை, லட்சியம் போன்ற சுயவிவரங்களை கேட்டறிந்தார். அதன் பின்னர் மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி கலெக்டர் மோகன் பேசியதாவது:-
பள்ளிப்பருவம் என்பது மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானம் செய்யக்கூடிய ஒரு சிறந்த காலகட்டமாகும். குறிப்பாக மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தங்களின் வாழ்க்கையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய நிலையாக உள்ளதால் மாணவ- மாணவிகள் ஒவ்வொருவரும் படிக்கின்ற காலத்தில் தங்களுக்குரிய இலக்கினை தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கு முழு முயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் செயலாற்ற வேண்டும்.
நீங்கள் ஒவ்வொருவரும் கடினமாக உழைக்கும்பட்சத்தில் வெற்றி என்பது அடைய முடியாத ஒன்றல்ல, தங்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தி உங்கள் கைகளில்தான் உள்ளது. எனவே மாணவர்கள் ஒவ்வொருவரும் சிறிய அளவில் சந்தோஷம் தரக்கூடிய செல்போன் பயன்படுத்துதல், வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற கவனம் சிதறக்கூடிய செயல்களில் ஈடுபடாமல் லட்சியத்தை அடைவதற்காக நல்ல முறையில் கல்வி பயில வேண்டும். உலகத்தில் அழிக்க முடியாத சொத்து கல்வி ஒன்றே ஆகும். அப்படிப்பட்ட கல்வியை நன்கு பயின்று தங்கள் வாழ்க்கைக்கான அடுத்தகட்ட அடித்தளத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இங்கு வருகை புரிந்துள்ள மாணவர்கள் அனைவரும் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்தவர்கள் இல்லை.
ஆகையால் தங்கள் குடும்ப சூழ்நிலை மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நல்ல முறையில் கல்வி பயின்று உங்களுக்கும், உங்களுக்கு பயிற்றுவித்து கொண்டிருக்கும் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலர்கள் கிருஷ்ணன், சிவசுப்பிரமணியம், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பெருமாள், செந்தில்குமார், அலுவலக கண்காணிப்பாளர் கோகுலகண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu