விழுப்புரம் மாவட்டத்தில் வெறிச்சோடிய பேருந்து நிலையங்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக இரவு நேர போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் வெறிச்சோடியது
மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக பயணிகள் நடமாட்டமின்றி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் வெறிச்சோடியது.அதுபோல் முக்கிய சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல், புதுச்சேரிக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த புயல் மற்றும் கனமழையின் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று, இன்றும் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மேலும் இந்த புயல் எச்சரிக்கை காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் அரசு பேருந்துகள் பெருமளவில் இயக்கப்படவில்லை. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நள்ளிரவு முதல் பலத்த சூறாவளி காற்று வீசியது. நேற்றும் காலையில் இருந்து மாலை வரை அவ்வப்போது பலத்த காற்று வீசியது. இன்றும் அதே நிலை நீடித்து வருகிறது,இடையிடையே சாரல் மழையும் தூறியது. தொடர்ந்து, பலத்த காற்று வீசிக்கொண்டே இருந்ததால் முக்கிய இடங்களில் இருக்கும் உயர்மின் கோபுர விளக்குகள் பாதுகாப்பு கருதி இறக்கி வைக்கப்பட்டன.
புயல் முன்எச்சரிக்கையாக பெரும்பாலான பொதுமக்கள், அத்தியாவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்வோர் மட்டும் வழக்கம்போல் சென்றனர். இருப்பினும் பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராததால் முக்கிய சாலைகள் வெறிச்சோடின. குறிப்பாக எப்போதும் பரபரப்பாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்தும் காணப்படும் விழுப்புரம்- புதுச்சேரி சாலை, திருச்சி நெடுஞ்சாலை, சென்னை நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடிய நிலையில் காட்சியளித்தது.
மேலும் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது. இதனால் பயணிகளின் தேவைக்கேற்ப குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து காலை முதல் மாலை வரை சென்னை, காஞ்சீபுரம், சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாமல் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து ஒன்றிரண்டு பேருந்துகளே இயக்கப்பட்டன. இதனால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் புயல் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இரவு நேரங்களில் அரசு பேருந்துகள் இயங்காது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு மேல் விழுப்புரத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூரு, கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட வெகுதொலைவில் இயக்கப்படும் அரசு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பேருந்துகள் அனைத்தும் அந்தந்த பணிமனைகளுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu