விழுப்புரத்தில் வீட்டு வசதி வாரிய அலுவலகப் பொருட்கள் ஜப்தி

விழுப்புரத்தில் வீட்டு வசதி வாரிய அலுவலகப் பொருட்கள் ஜப்தி
X

வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உள்ள பொருட்கள் நீதிமன்ற உத்தரவின்படி ஜப்தி செய்யப்பட்டது

நிலத்தை கையகப்படுத்தியதற்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் விழுப்புரம் வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்களை நீதிமன்ற உத்தரவுப்படி ஜப்தி செய்தனர்

விழுப்புரம் மாந்தோப்பு தெரு பகுதியை சேர்ந்தவர் ஷேக் காதர்அலி (வயது 65). இவருக்கு சொந்தமாக விழுப்புரம் சாலாமேடு பகுதியில் 2.5 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தை 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், குடியிருப்புகள் கட்டுவதற்காக அரசு கையகப்படுத்தியது. இதற்காக சதுர அடிக்கு 2 ரூபாய் என வீட்டுவசதி வாரியம் நிர்ணயம் செய்தது.

இந்த தொகை குறைவாக உள்ளதாகவும், சதுர அடிக்கு 25 ரூபாயாக உயர்த்தி வழங்கக்கோரியும் கடந்த 2002-ம் ஆண்டில் ஷேக் காதர்அலி, விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது சதுர அடிக்கு 2 ரூபாய்தான் வழங்க முடியும், அதற்கு மேல் வழங்க முடியாது என்று வீட்டுவசதி வாரியம் கூறியது.

இதையடுத்து ஷேக் காதர்அலி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர் ஷேக் காதர்அலியின் நிலத்திற்கு சதுர அடிக்கு 16 ரூபாய் வரை வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று வீட்டுவசதி வாரியத்திற்கு உத்தரவிட்டது.

இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி மனுதாரர் ஷேக் காதர்அலிக்கு இழப்பீட்டு தொகையாக வட்டியுடன் சேர்த்து ரூ.24 லட்சத்து 89 ஆயிரத்து 28-ஐ வீட்டுவசதி வாரியம் வழங்க வேண்டுமென்றும், இத்தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்கவில்லையெனில் அத்தொகைக்கு ஈடாக வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துக்களான 5 கணினிகள், 10 இரும்பு அலமாரிகள், 10 மின்விசிறிகள், 10 மேஜைகள், பீரோக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் வாகனம் ஆகியவை ஜப்தி செய்யப்படும் என்று நீதிபதி விஜயகுமார், கடந்த 19-ந் தேதியன்று உத்தரவிட்டார்.

ஆனால் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகும் ஷேக் காதர்அலிக்கு வீட்டுவசதி வாரியம் உரிய இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை. இந்நிலையில் விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு மனுதாரருடன் வக்கீல்கள் தனராஜன், ராஜகுமாரன், நீதிமன்ற முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் ராஜி ஆகியோர் சென்று அங்கிருந்த கணினிகள், இரும்பு அலமாரிகள், மின்விசிறிகள், மேஜைகள், பீரோக்கள் ஆகியவற்றை ஜப்தி செய்து வண்டியில் ஏற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோன்று விழுப்புரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தும் நில உரிமையாளர்களுக்கு நிலத்தின் சந்தை மதிப்பீட்டுத் தொகையை குறைத்துக் கொடுப்பது மூலம் சிலர் நீதிமன்றத்திற்கு சென்று இழப்பீடு கேட்டு அந்த அலுவலகத்தை ஜப்தி செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து வண்ணம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் மத்தியில் குற்றசாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்