விழுப்புரம் நீதிமன்ற செய்திகள்: பொன்முடி வழக்கு, பெண் ஐ.பி.எஸ். அதிகாரி வழக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம் நீதிமன்ற செய்திகள்: பொன்முடி  வழக்கு, பெண் ஐ.பி.எஸ். அதிகாரி வழக்கு ஒத்திவைப்பு
X
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு ஆகியவற்றை நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது

விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வரும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை 24-ந் தேதிக்கு விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

விழுப்புரம் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நிறைவு செய்ததை தொடர்ந்து இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் ஜன.20-ந்தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை.

இதையடுத்து இவ்வழக்கு விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.

அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை 30-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 7 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஜனவரி.20-ந்தேதி வெள்ளிக்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத் ஆகிய 3 பேர் மட்டும் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், கோதகுமார் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!