விழுப்புரம் ரயில் நிலையத்தில் வேகமாக நடைபெற்று வரும் தண்டவாள பராமரிப்பு பணிகள்!
விழுப்புரம் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் முக்கிய சந்திப்பு ரயில் நிலையமாக விழுப்புரம் ரயில் நிலையம் விளங்கி வருகிறது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் விழுப்புரம் ரயில் நிலையம் வழியாக சென்று வருகின்றன.
இதுதவிர டெல்லி, ஹவுரா, மும்பை, திருப்பதி, மங்களூரு, மேற்கு வங்காள மாநிலம் புருலியா, காரக்பூர், ஒடிசா மாநிலம் புவனேஸ்வர், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கும் விழுப்புரம் வழியாக ரயில் போக்குவரத்து உள்ளது.
இந்த ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் விழுப்புரம் ரயில் நிலையம் எந்நேரமும் பரபரப்பாக இயங்கும். அதுபோல் நிலக்கரி, நெல், சர்க்கரை, அரிசி மூட்டைகள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்கு வகைகளை ஏற்றிக்கொண்டு தினந்தோறும் விழுப்புரம் வழியாக 20-க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், விழுப்புரம் ரயில் நிலையத்திற்குள் ரயில்கள் உள்வாங்கப்படும் பகுதியில் ரயில் பெட்டிகளின் பாரத்தை தாங்கக்கூடிய வகையில் தண்டவாளங்கள் உறுதியாக இருக்கின்றனவா? என்று அவ்வப்போது பராமரிப்பு செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி தற்போது ரயில்கள் உள்வாங்கப்படும் பாயிண்ட் பிரியும் இடத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்பணியில் ரயில்வே என்ஜினீயரிங், சிக்னல், எலக்ட்ரிக்கல் ஆகிய பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். தண்டவாளங்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் பழைய தண்டவாளங்களை அகற்றிவிட்டு புதிய தண்டவாளங்களை பொருத்தும் பணிகளும், புதிதாக ஜல்லிக்கற்கள் மற்றும் மண் போடும் பணிகளும், பாயிண்ட் மாற்றம் செய்யும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்காக ராட்சத எந்திரம் வரவழைக்கப்பட்டு பழைய தண்டவாளங்கள் அகற்றப்பட்டு புதிய தண்டவாளங்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டன. அதுபோல் தண்டவாளங்களில் ஆயில் மற்றும் கிரீஸ் பூசும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக சரக்கு ரயில்கள் செல்லக்கூடிய தண்டவாள பகுதிகளில் தடம் புரளாமல் எளிதாக சென்றடையும் வகையில் தண்டவாளங்களை வலுப்படுத்தும் விதமாகவும், பிற்காலத்தில் சரக்கு ரெயிலின் வேகத்தை அதிகரிப்பதற்கு வசதியாகவும் இந்த பராமரிப்பு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்பணியை கோட்ட பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர்கள் சுர்லாராம் சத்தியநாராயணன், மோகித்குப்தா, சிக்னல் பிரிவு அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது பணி மேற்பார்வையாளர்கள் பரமசிவம், செல்வம், ரகு ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu