விழுப்புரம் மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 1.33 கோடி நலத்திட்ட உதவிகள்

விழுப்புரம் அருகே நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மோகன் வழங்கினார்.
தொடர்பு திட்ட முகாம்
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனாங்கூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 222 பேருக்கு ரூ.1.33 கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகன் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் வட்டம், கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனாங்கூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
நிகழ்ச்சியில் துரை.ரவிக்குமார் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் லட்சுமணன், புகழேந்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார் அனைவரையும் வரவேற்றார். முகாமில் 222 பேருக்கு ரூ.1 கோடியே 33 லட்சத்து 48 ஆயிரத்து 450 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகன் வழங்கினார்.
இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் மோகன் பேசியதாவது:-
கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால்தான் தமிழகம் நிலையான வளர்ச்சியை அடைந்திட முடியும் என்ற வகையில் அரசே மக்களை தேடி அவர்களின் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றிடும் வகையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாதந்தோறும் 2 முறை நடத்தப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான திட்டங்கள் உடனடியாக கிடைக்கப்பெற்று வருகிறது. இம்முகாமில் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மோகன் பேசினார்.
இம்முகாமில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் காஞ்சனா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பொன்னம்பலம், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரகுபதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, கோலியனூர் ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம், துணைத்தலைவர் உதயகுமார், மாவட்ட கவுன்சிலர் வனிதா அரிராமன், ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயஸ்ரீதர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இதுபோன்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாதத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளின் அடிப்படை தேவைகள் குறித்து முகாமிற்கு தலைமை தாங்கும் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை அந்தந்த பகுதி மக்கள் கொடுத்து வருகின்றனர், அதனைப் பெற்று மாவட்ட கலெக்டர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை கண்காணித்தும் வருகிறார். மேலும் இது போன்ற முகாம்களில் அந்த ஊராட்சிக்கு தேவையான மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் நலத்திட்டங்களை அரசு சார்பில் வழங்கி வருகிறார். மாவட்ட ஆட்சியரின் இந்த உடனடி நடவடிக்கைகள் அந்தந்த ஊராட்சி மக்கள் வாழ்வாதாரத்தில் உயர வழிவகை செய்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu