சட்ட கூலி கேட்டு விழுப்புரம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தர்ணா
சட்ட கூலி கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு முறையாக சட்ட கூலி ரூ.490 வழங்காமல் குறைத்து வழங்குவதை நிறுத்தி, சட்ட கூலி ரூ.490 முழுமையாக வழங்க வேண்டும்,அதே வேளையில் மாதமாதம் சம்பளம் வழங்காமல் இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து சம்பளம் வழங்கப்படுவதை கைவிட்டு மாதாமாதம் சம்பளம் வழங்க வேண்டும், ஒரு நாள் விடுப்பு எடுத்தால் மூன்று நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும், எந்தவித காரணமும் இன்றி ஐந்து தொழிலாளர்களின் வேலை நீக்கத்தை கைவிட்டு, உடனடியாக அவர்களுக்கு பணி வழங்க வேண்டும், கடந்த 15 ஆண்டுகளாக பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர ஒப்பந்த பணியாளர்களாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் 299 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு காவல்துறை சார்பில் காலை 10மணிக்கு போராட்டத்திற்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில், திங்கட்கிழமை அங்கு காலை 7.30 மணிக்கு ஒன்று கூடிய 200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் திடீரென பெருந்திட்ட நுழைவு வாயில் முன்பு அமர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக அங்கு விரைந்து வந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிடாமல் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சி.பி.எம். மாநில குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த துப்புரவு பணியாளர்களுக்கு காவல்துறை, வருவாய்த்துறை நெருக்கடி கொடுப்பதை பார்த்து உடனடியாக அங்கு சென்று துப்புரவு பணியாளர்களுடன் பேசினார், அப்போது அவர்கள் நியாயமான கோரிக்கைகளுடன் போராட்டம் நடத்துவது தெரியவந்தது, உடனடியாக சி.பி.எம். கட்சி அவர்களுக்கு துணையாக போராட்ட களத்தில் இறங்கியது,இதனால் சுதாரித்துக் கொண்ட காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் துப்புரவு பணியாளர்களுடன் சமூக பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மோகன் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் எஸ்.முத்துக்குமரன், மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி ஆகியோர் தலைமையில் துப்புரவு பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார், பேச்சுவார்த்தையில் சட்ட கூலி ரூ.490,பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், மற்ற கோரிக்கைகளையும் பரிசீலனை செய்வதாக கூறினார், இதனையடுத்து விழுப்புரம் நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.போராட்டத்தில் பெரியார், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu