ஒழுங்குமுறை விற்பனை கூட ஆன்லைனுக்கு வியாபாரிகள் மறுப்பு

ஒழுங்குமுறை விற்பனை கூட ஆன்லைனுக்கு வியாபாரிகள் மறுப்பு
X

அமைச்சர் மஸ்தான் 

விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆன்லைன் வர்த்தகத்துக்கு வியாபாரிகள் மறுப்பு தெரிவித்தனர்

ஆன்லைன் முறை கொள்முதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஒழுங்குமுறை விற்பனைக்கூட வியாபாரிகளிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி 2 நாட்களில் முடிவை தெரிவிப்பதாக அறிவித்தார்.

ஆன்லைன் முறை கொள்முதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக்கூட வியாபாரிகளிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து 2 நாட்களில் முடிவை அறிவிப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று முன்தினம் விவசாயிகள் எடுத்து வரும் நெல் உள்ளிட்ட தானியங்களை ஆன்லைன் முறையில், அதாவது மின்னணு ஏல முறையில் கொள்முதல் செய்திட வேண்டும் என்று வியாபாரிகளிடம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து தானியங்களை கொள்முதல் செய்யவில்லை. இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் விற்பனைக் கூடத்தை முற்றகையிட்டனர். இது தெடர்பான பேச்சுவார்த்தையில் தீர்வு ஏதும் ஏற்படாததால், மறு அறிவிப்பு வரும் வரைக்கும் விவசாயிகள் யாரும் தானியங்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு எடுத்து வர வேண்டாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த பிரச்னை குறித்து அறிந்த, அமைச்சர் செஞ்சி மஸ்தான் செஞ்சி ஒழுங்முறை விற்பனைக்கூடத்துக்கு சென்றார். அங்கு மின்னணு ஏலமுறை தொடர்பாக அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், கூடுதல் விலை கிடைக்கும் என்பதற்காக விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வருகின்றனர். இதுவரையில் நேரடியாக வியாபாரிகள் கொள்முதல் செய்து வந்தனர். வியாபாரிகள், விவசாயிகளுக்கு நன்மை தற்போது, தமிழக அரசு ஆன்லைன் மூலம் விலை நிர்ணயம் செய்து பொருட்களை கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் பலதரப்பட்ட வியாபாரிகள் மின்னணு ஏலத்தில் கலந்து கொள்வதால் வியாபாரிகளுக்கு தரமான பொருட்கள் கிடைப்பதுடன் விவசாயிகளுக்கு நல்ல விலையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆகையால் இந்த முறையை பயன்படுத்துவதால் அனைவருக்கும் நன்மைகள் தான். இந்த புதிய முறையை நடைமுறைபடுத்துவது தொடர்பாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் செயல் விளக்கம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

பின்னர், அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஒழுங்குமுறை விற்பனைக்கூட பகுதியை ஆய்வு செய்தார். அப்போது அங்கு தேவையான வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், விவசாயிகளிடமும் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் மோகன், செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், சென்னை வேளாண்மை மற்றும் வேளாண் வணிகத்துறை கூடுதல் இயக்குனர் கணேசன், செஞ்சி தாசில்தார் நெகருன்னிசா, பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம், வருவாய் ஆய்வாளர் கண்ணன், விழுப்புரம் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் ரவி, செஞ்சி கண்காணிப்பாளர் வேலன் உள்பட பலர் உடனிருந்தனர்.

இதற்கிடையே அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள வியாபாரிகளிடம் பேசி நல்ல முடிவு எடுப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக, மறு அறிவிப்பு வரும் வரையில் விவசாயிகள் தானியங்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு எடுத்து வர வேண்டாம் என்று ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தரப்பில் மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!