விழுப்புரம் மாவட்ட க்ரைம் செய்திகள்

விழுப்புரம் மாவட்ட க்ரைம் செய்திகள்
X

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த குற்றச்சம்பவங்களின் தொகுப்பு.

திண்டிவனம் அருகே, கிணறில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தார்.

கிணறில் தவறி விழுந்த விவசாயி பலி

திண்டிவனம் அடுத்த சாலை கிராமத்தை சேர்ந்தவர் குப்பன்(வயது 55). விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக அங்குள்ள கிணறில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரோசனை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு நேரில் வந்து, குப்பனின் உடலை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

திண்டிவனம் அருகே உள்ள குண்ணப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு(வயது 60). விவசாயி. இவர் வீட்டின் அருகே கொட்டகையில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை, அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலு இறந்தார். வயிற்றிவலி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

நண்பரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

விழுப்புரம், மகாராஜபுரத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது 41), ஆட்டோ டிரைவர். இவரும் விழுப்புரம் பானாம்பட்டு பாதை ஊரல்கரைமேடு பகுதியை சேர்ந்த சோமஸ்(47) .இருவரும் நண்பர்கள். இவர்கள், சவிதா தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில், ஆட்டோ ஓட்டி வருகின்றனர். சோமஸ், குடிபோதையில் இளையராஜாவை மது குடிக்க அழைத்துள்ளார். அதற்கு அவர், தன்னை நாய் கடித்துவிட்டது என்றும், இதனால் மது குடிக்க வரவில்லை என்றும் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சோமஸ், இளையராஜாவை திட்டி, செங்கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சோமசை கைது செய்தனர்.

வாலிபர்கள் மீது தாக்குதல்; 2 பேர் கைது

திண்டிவனம், பூதேரி பகுதி ராஜன் நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் பிரகாஷ்(வயது 26). இவர் திண்டிவனத்தில் இருந்து தனது நண்பர் விக்னேஷ் என்பவருடன் மோட்டார் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பூதேரி மாரியம்மன் கோவில் அருகே உள்ள பெரிய வாய்க்கால் பகுதியில் சென்றபோது அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர், சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து பேசிக்கொண்டிருந்தனர். இதை தட்டிக்கேட்ட பிரகாஷ், விக்னேஷ் இருவரையும் அவர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர்களை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இது குறித்த புகாரின் பேரில் பூதேரி கிராமம் வெங்கடேசன் மகன் மாரிமுத்து(22), சதீஷ்(19), ஏழுமலை மகன் பிரவீன்(23), தங்கராசு மகன் விக்னேஷ் (22) ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவுசெய்த போலீசார் மாரிமுத்து, சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!