பிரதமர் உதவித் தொகை திட்டத்தில் விவசாயிகள் பணம் பெற ஆதார் இணைப்பு அவசியம்..

பிரதமர் உதவித் தொகை திட்டத்தில் விவசாயிகள் பணம் பெற ஆதார் இணைப்பு அவசியம்..
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன். (கோப்பு படம்).

பி.எம். கிசான் திட்ட தவணைத் தொகை பெற ஆதார் எண்ணை விவசாயிகள் 30 ஆம் தேதிக்குள் உறுதி செய்வது அவசியம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவுறுத்தி உள்ளார்.

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மூன்று தவணைகளாக தலா ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்கப்படும் இந்த உதவித் தொகையை பெற ஆதார் எண் இணைப்பு அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:

பி.எம்.கிசான் திட்டம் என்ற பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் தமிழகத்தில் விவசாயிகளுக்கு உதவித் தொகையாக 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் என மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் மூலமாக மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் தொடர்ந்து பயன்பெறுவதற்கு ஆதார் எண் உறுதி அவசியம். நடப்பாண்டில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிய உள்ள காலத்துக்கான 13 ஆவது தவணைத் தொகை பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே, பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது செல்போன் எண் மூலமாகவோ தாங்களாகவே ஆதார் எண்ணை உறுதி செய்துகொள்ளலாம். உங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று தனது பெயரை பி.எம்.கிசான் இணையதளத்தில் e-KYC செய்ய வேண்டுமென்று கோரும் நிலையில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம்.

மேலும், பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல்ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். உங்களது செல்போனில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்குச்சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

எனவே, இதுவரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருக்கும் பயனாளிகள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் பணம் பெறுவதற்காக விவசாயி என்ற போர்வையில் பலர் மோசடி செய்தது தெரியவந்ததால் கிசான் பணத்தை வழங்குவதில் அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து அதன்படி தகுதியான விவசாயிகள் இணையதளத்தில் பதியும்போது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் விவசாயிகள் கிசான் பணம் பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். ஒரு சில பேர் ஆதார் எண் இணைக்கப்படாததால் பணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர், அதனால் விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் விடுபட கூடாது என்ற நோக்கத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆதார் எண் கிசான் திட்டத்தில் இணைக்க வேண்டும் என தற்போது வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil