எஸ்.சி, எஸ்.டி.பிரிவினர் கடனுதவி பெற விழுப்புரம் கலெக்டர் அழைப்பு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.
விழுப்புரம் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் 2022-23-ம் நிதியாண்டிற்கு தாட்கோ திட்டங்களில் பயன்பெற ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதில் நிலம் வாங்குதல், நிலம் மேம்பாட்டுத்திட்டம், துரித மின் இணைப்பு, கிணறு அமைத்தல் திட்டம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோர் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு 18 வயது முதல் 65 வயது வரையுள்ள ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வருமான வரம்பு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அதேபோல் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முடநீக்க மையம், ரத்த பரிசோதனை நிலையம் மற்றும் அதனை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கு வயது வரம்பு 18 முதல் 45 வரை ஆகும்.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவிகளுக்கு மானியத்துடன் கூடிய நிதியுதவி வழங்கப்படும். சுய உதவிக்குழுக்களுக்கு பொருளாதார கடனுதவி மானியம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த அனைத்து திட்டங்களுக்கும் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதள முகவரியான http://application.tahdco.com மற்றும் http://fast.tahdco.com மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்களின் முழு விவரங்கள், புகைப்படம், சாதிச்சான்று, வருமானச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விலைப்புள்ளி, விண்ணப்பதாரரின் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, திட்ட அறிக்கை, பட்டா சிட்டா விவரங்கள் அவசியமாகும். இந்த ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இணையதளத்தில் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். மேற்கண்ட விவரங்களின்படி பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu