மேல்மலையனூர் அருகே தார் ஆலையை மூட கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

மேல்மலையனூர் அருகே தார் ஆலையை மூட கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
X

மேல் மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

மேல்மலையனூர் அருகே தார் ஆலையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

தனியாருக்கு சொந்தமான தார் ஆலையை மூட கோரி மேல்மலையனூர் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்டது பறையந்தாங்கல் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்டது பழம்பூண்டி கிராம பகுதியில் தனியாருக்கு சொந்தமான தார் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு, பழம்பூண்டி, சங்கிலிகுப்பம், திருவள்ளுவர் நகர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுவதாக கூறி அக்கிராம மக்கள் தார் ஆலையை மூட கோரி அரசுக்கு பலமுறை கோரிக்கை மனு அனுப்பினர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பழம்பூண்டி கிராம மக்கள் வியாழக்கிழமை கருப்பு கொடிகளுடன் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ஆலையினால் ஏற்படும் பாதிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்தில் பா.ம.க மாநில துணை அமைப்புச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பா.ம.க.வினரும் கலந்து கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த திண்டிவனம் உதவி காவல் கண்காணிப்பாளர் தேவராஜ், வட்டாட்சியர் அலெக்சாண்டர், செஞ்சி துணை காவல் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த ஆலை தொடர்பாக அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் உங்களது கோரிக்கைக்கு தீர்வுகான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை ஏற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.

Tags

Next Story
பவானி வர்த்தக மையத்தில் புதிய பாக்கு சீசன் தொடக்கம்